வேலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் ராகிங் செய்யும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை டீன் செல்வி எச்சரிக்கை

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரியில் ராகிங் செய்யும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டீன் செல்வி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2019-08-01 22:30 GMT
அடுக்கம்பாறை, 

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த மருத்துவக்கல்லூரியில் ஆண்டுக்கு 100 மாணவ, மாணவிகளும், நர்சிங் கல்லூரியில் ஆண்டுக்கு 300 மாணவிகளும் படிக்கின்றனர். இந்த மருத்துவக்கல்லூரியில் 15-ம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நேற்று முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து நடந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சிக்கு, டீன் செல்வி தலைமை தாங்கினார். துணை முதல்வர் முகமதுகனி, மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜவேலு, குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி குடியிருப்பு மருத்துவ அலுவலர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.

விழாவில் டீன் செல்வி குத்துவிளக்கேற்றி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிதாக வந்துள்ள மாணவர்கள் இயல்பாகவும், கவனத்துடனும் உங்கள் மருத்துவ படிப்பை தொடர வேண்டும். மாணவர்களின் தேவைகள் மற்றும் சந்தேகங்களை எங்களிடம் தயங்காமல் கேட்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நன்றாக படிக்கிறார்களா? என கண்காணிக்க வேண்டும். மாணவர்களை நாங்கள் நன்றாக படிக்க வைத்து, டாக்டர்களாக உருவாக்கி தருகிறோம். பிள்ளைகள் நலன் குறித்து பெற்றோர்கள் கவலைப்பட வேண்டாம். அவர்களுக்கு முழு பாதுகாப்பு மற்றும் அனைத்து வசதிகளும் இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ளது.

பெற்றோர்கள் உங்கள் பிள்ளைகளின் கல்வி நிலையை அந்தந்த துறை பேராசிரியர்கள் மற்றும் முதல்வர் அலுவலகத்திலும் கேட்டு தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் மருத்துவக்கல்வி மட்டுமல்லாது, விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும். கல்லூரியை தூய்மையாக வைத்துக்கொள்ள மாணவர்கள் ஒத்துழைக்க வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் பெற்றோருக்கும், கல்லூரிக்கும், இந்த சமூகத்திற்கும் நேர்மையாக இருக்க வேண்டும். மூத்த மாணவர்களோடு சகோதர மனப்பான்மையோடு பழகவேண்டும். இந்த கல்லூரியில் ராகிங் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை தடுக்க கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. ராகிங் செய்யும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து என்னிடம் நேரடியாக புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், டாக்டர்கள், விடுதி காப்பாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்