ஆடிப்பெருக்கையொட்டி பழையாற்றில் முளைப்பாரி விட்டு பெண்கள் வழிபாடு

ஆடிப்பெருக்கையொட்டி வீரநாராயணமங்கலம் பழையாற்றில் முளைப்பாரியை விட்டு பெண்கள் வழிபாடு நடத்தினார்கள்.

Update: 2019-08-03 22:30 GMT
ஆரல்வாய்மொழி,

தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா நேற்று நடந்தது. அதன்படி இறச்சகுளம் பகுதியில் 15-வது ஆண்டு ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது. இதையொட்டி இறச்சகுளம் வீரநாராயணமங்கலம் மற்றும் தாழக்குடி பகுதியை சேர்ந்த பெண்கள் கடந்த 27-ந் தேதியன்று கங்காதேவியை நினைத்து முளைப்பாரி வளர்க்க தொ டங்கினர்.

ஆடிப்பெருக்கையொட்டி நேற்று மாலையில் முளைப்பாரியுடன் பெண்கள் முப்பிடாரி அம்மன் கோவிலுக்கு வந்தனர். அங்கு தீபாராதனை முடிந்ததும், ஆடிப்பெருக்கு விழா குழுத் தலைவர் பார்வதி தலைமையில் முளைப்பாரியுடன் ஊர்வலமாக இருமுடி சோழ விநாயகர் கோவிலுக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து வீரநாராயணமங்கலத்தில் ஓடும் பழையாற்றுக்கு வந்தனர்.

முளைப்பாரி

அங்கு விநாயகர், கங்காதேவிக்கு பெண்கள் பூஜை செய்து, மலர்களை தூவி வழிபாடு நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து அவர்கள் பக்தி பாடல்களை பாடினார்கள். பின்னர் தீபாராதனை காட்டினார்கள்.

அதன்பிறகு சுமங்கலி பெண்கள் மஞ்சள் கயிறுகளை கட்டிக்கொண்டு அவரவர் மாங்கல்யத்தில் குங்குமம் வைத்து கொண்டனர். அதைத்தொடர்ந்து தாங்கள் சுமந்து வந்த முளைப்பாரியை ஆற்றில் விட்டனர். அதன்பிறகு அன்னதானம் நடைபெற்றது. 

மேலும் செய்திகள்