‘உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வருவது தவறு’ இல.கணேசன் கருத்து

‘உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வருவது தவறு’ என பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-08-03 22:00 GMT
வேடசந்தூர்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ஒன்றிய, நகர பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை குறித்த நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கி பேசினார். மாவட்ட பொருளாளர் வீரமணி, வேடசந்தூர் தொகுதி தலைவர் ஜெயராமன், தொகுதி ஒருங்கிணைப்பாளர் சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள். நகர தலைவர் சுரேஷ் வரவேற்று பேசினார். கூட்டத்தில் பா.ஜ.க. மூத்த தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசன், மாநில செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்கள். முடிவில் ஒன்றிய தலைவர் தண்டபாணி நன்றி கூறினார்.

கூட்டம் முடிந்தவுடன் இல.கணேசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடு முழுவதும் 11 கோடிக்கு மேல் உறுப்பினர்களை கொண்ட பெரிய கட்சியாக பாரதீய ஜனதா திகழ்கிறது. மேலும் 10 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. குமாரசாமி ஆட்சியில் வாயே திறக்காதவர்கள் எடியூரப்பா பதவி ஏற்றவுடன் காவிரி தண்ணீர் பற்றி பேசுகிறார்கள். ஆனால் அதிர்ஷ்டவசமாக மழை பெய்து காவிரி தண்ணீரை திறந்துவிட்டுள்ளனர்.

அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வெற்றி பெறவேண்டும் என்பதற்காகத்தான் நாங்களும் பாடுபட்டு வருகிறோம். சிலர் பொதுக்கூட்டத்தில் பேசுவார்கள். சில பேர் களப்பணியில் ஈடுபடுவார்கள். அந்த வகையில் நாங்கள் களப்பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஸ்டாலின் வாரிசு அரசியல் வட்டத்திற்குள் வரமாட்டார் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வருவது தவறு என்று கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக வடமதுரை ஒன்றிய பாரதீய ஜனதா சார்பில் வடமதுரையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதற்கு பாரதீய ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தலைமை தாங்கி உறுப்பினர் அட்டைகள் வழங்கினார். இந்த முகாமிற்கு மாநில செயலாளர் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் வரவேற்றுப் பேசினார். மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் சக்திவேல், ஒன்றிய தலைவர் ராமசாமி, நகர தலைவர் சண்முகம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்