புதுவையில் நடந்த பயங்கர சம்பவம்: வாலிபர் கொலையில் 8 பேர் கைது - நண்பரை கொன்றதற்கு பழிக்குப்பழி தீர்த்ததாக வாக்கு மூலம்

புதுவையில் வாலிபரை வெட்டி கொலை செய்ததாக 8 பேரை போலீசார் கைது செய்தனர். நண்பரை கொன்றதற்கு பழிக்குப் பழியாக இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசில் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Update: 2019-08-04 23:45 GMT
புதுச்சேரி,

புதுவை ஜீவானந்தபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 26). இவர் கடந்த ஜனவரி மாதம் மடுவுபேட் பகுதியில் நடந்த அருள் என்பவரது கொலையில் முக்கிய குற்றவாளி ஆவார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவர் அதன்பின் ஜாமீனில் வெளியே வந்தார். எதிரிகளால் அச்சுறுத்தல் இருந்து வந்த நிலையில் அவர்களிடம் இருந்து தப்பிக்க மும்பைக்கு சென்று தலைமறைவாக இருந்தார். அதன்பின் கடந்த சில மாதங்களுக்கு பின் புதுச்சேரி திரும்பினார்.

கடந்த 2-ந் தேதி இரவு குறிஞ்சி நகர் மெயின்ரோட்டில் ஆறுமுகம் நின்று கொண்டிருந்தார். அப்போது கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பல் அவரை சுற்றி வளைத்தது. இதைப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம் அவர்களிடம் இருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை விடாமல் ஓடஓட விரட்டி அந்த கும்பல் வெட்டிச் சாய்த்தது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் ஆறுமுகம் பிணமானார்.

இந்த பயங்கர சம்பவம் குறித்து லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கும்பல் குறித்து விசாரித்தனர். இதில் ஏற்கனவே கொலை செய்யப்பட்ட அருள் கொலைக்கு பழிக்குப்பழியாக அவரது கூட்டாளிகள் 8 பேர் சேர்ந்து ஆறுமுகத்தை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

மேலும் புதுச்சேரியை சேர்ந்த ரகு என்கிற மாரியப்பன்(30), அருண்(24), விக்கி என்கிற விக்னேஷ்(24), அக்சய்(23), சுரேஷ்குமார்(24), சக்தி என்கிற சத்தியமூர்த்தி(22), தட்டாஞ்சாவடி சந்தோஷ்குமார்(23) கவுண்டன்பாளையம் விக்கி(22) ஆகிய 8 பேர் சேர்ந்து கொலை சம்பவத்தை அரங்கேற்றியது அம்பலமானது. இதையடுத்து அவர்கள் 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய 4 வீச்சரிவாள்கள், 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைதானவர்கள் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

ஜீவானந்தபுரம் பகுதியை சேர்ந்த எங்களது கூட்டாளி அருள் கடந்த ஜனவரி மாதம் 22-ந் தேதி மடுவுபேட் பகுதியில் உள்ள ஒரு பாரில் வைத்து கொலை செய்யப்பட்டார். இதில் ஆறுமுகம் முக்கிய குற்றவாளியாக இருந்தார். இந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த ஆறுமுகம் புதுவையை விட்டு வெளியேறினார். எங்கள் நண்பர் அருளின் கொலைக்கு பழிதீர்க்கும் வகையில் ஆறுமுகம் புதுவைக்கு வந்தால் அவரை கொலை செய்ய திட்டமிட்டு இருந்தோம்.

தலைமறைவாக இருந்த ஆறுமுகம் புதுவைக்கு மீண்டும் திரும்பினார். கடந்த 2-ந் தேதி அவரை பார்த்த எங்கள் கூட்டாளியான ரகு உடனே எங்களுக்கு தகவல் தெரிவித்தார். குறிஞ்சி நகர் பகுதியில் நிற்பதாக தகவல் கிடைத்து நாங்கள் அங்கு சென்று அவரை சுற்றி வளைத்து வெட்டிக் கொலை செய்தோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர் அவர்கள் 8 பேரையும் போலீசார் புதுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்