காதல் திருமண விவகாரத்தில் தாக்கப்பட்டதாக, அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற கண்டக்டர் சாவு - கொலை வழக்கு பதிந்து போலீசார் விசாரணை

காதல் திருமண விவகாரத்தில் தாக்கப்பட்டதாக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற கண்டக்டர் உயிரிழந்தார். இதுதொடர்பாக கொலை வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-08-05 22:45 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பிக்கம்பட்டியை சேர்ந்த 24 வயது வாலிபர் வேறு சமூகத்தை சேர்ந்த கல்லூரி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாணவியின் உறவினர்களில் சிலர், காதல் திருமணம் செய்த வாலிபரின் பெற்றோர் மற்றும் உறவினர்களை சிறைப்படுத்தி தாக்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக நடவடிக்கை கோரி வாலிபரின் உறவினர்கள் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனர். இதுதொடர்பாக மாணவியின் உறவினர்கள் 6 பேர் மீது இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த வழக்கில் சிக்கிய அரசு பஸ் கண்டக்டரான தர்மலிங்கம் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடலில் காயங்களுடன் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். காதல் விவகாரத்தில் சிக்கிய வாலிபரின் தரப்பை சேர்ந்த சிலர் கூலிப்படை மூலம் தர்மலிங்கத்தை தாக்கி, கொலை செய்ய முயன்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த கோரி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் தர்மலிங்கத்தின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தர்மலிங்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து நேற்று தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் திரண்ட உறவினர்கள் தர்மலிங்கத்தின் உயிரிழப்பு தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும். 5 டாக்டர்களை கொண்ட குழு அமைத்து பிரேத பரிசோதனையை நடத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியளிக்காவிட்டால் உடலை வாங்க மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து தர்மலிங்கத்தின் மரணம் தொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். பிரேத பரிசோதனை முடிவின் அடிப்படையில் இந்த வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று மாலை தர்மலிங்கத்தின் உடல் பிரேத பரிசோதனை நடைபெற்றது. பின்னர் அவருடைய உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த கொலை வழக்கு தொடர்பாக ஒகேனக்கல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்