இந்தியாவிலேயே தமிழகம் சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்குகிறது - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பெருமிதம்

இந்தியாவிலேயே தமிழகம் சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்குகிறது என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

Update: 2019-08-05 22:45 GMT
பென்னாகரம்,

தர்மபுரி மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழா கடந்த 3-ந்தேதி தொடங்கியது. விழாவையொட்டி தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு துறைகள் சார்பில் பல்துறை பணி விளக்க கண்காட்சி நடைபெற்றது. ஆடிப்பெருக்கின் நிறைவு விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் சிவன்அருள், சுற்றுலா வளர்ச்சிக் கழக பொது மேலாளர் மோகன்ராஜ், எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மாவட்ட பால்வளத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சுற்றுலா அலுவலர் சிவராஜ் வரவேற்று பேசினார்.

விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பல்துறை பணிவிளக்க கண்காட்சியில் சிறப்பாக அரங்குகளை அமைத்த அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், தமிழகம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகம் முழுவதும் கலை மற்றும் கலாசார பண்பாட்டை வளர்க்கும் வகையில் இதுபோன்ற விழாக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி முதல் ஆட்டுக்காரம்பட்டி வரையிலும், மதிகோன்பாளையம் முதல் நாயக்கன்கொட்டாய் வரையிலும் ரூ.44.63 கோடி மதிப்பில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்து கொண்டு பல்வேறு துறைகள் சார்பில் 212 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியே 28 லட்சத்து 9 ஆயிரத்து 335 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், ஆசியாவிலேயே சுற்றுலாத்துறையில் இந்தியா முதல் இடம் வகிக்கிறது. இந்தியாவிலேயே தமிழகம் சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் உள்ள பாரம்பரிய சுற்றுலா தலங்கள், கோவில்கள், கடற்கரைகள், நீர்வீழ்ச்சிகள், கலை பண்பாட்டை வெளிபடுத்தும் வகையில், கோட்டைகள் பாரம்பரிய புராணங்கள் ஆகியவற்றை பார்வையிட ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இங்குள்ள சாலை வசதி, போக்குவரத்து வசதி, சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு ஆகியவை சுற்றுலா பயணிகளை கவருவதற்கு சாதகமான சூழ்நிலைகளாக நிலவுகிறது. ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அரூர் அருகே தீர்த்தமலையை சுற்றுலாத்துறை சார்பில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் கூறினார்.

விழாவையொட்டி அமைச்சர்கள் மீன்வளத்துறை சார்பில் ஒகேனக்கல்லில் மீன்கள் உற்பத்தியை பெருக்கும் வகையில் 1½ லட்சம் மீன் குஞ்சுகளை காவிரி ஆற்றில் விட்டனர். விழாவில் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் நாகராஜன், கூட்டுறவு சங்க தலைவர் ஆறுமுகம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாரதிதாசன் நன்றி கூறினார். விழாவையொட்டி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மேலும் செய்திகள்