அந்தியூர் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல் போலீசார் விரட்டிச்சென்று பிடித்தனர்

அந்தியூர் அருகே மணல் கடத்திய லாரியை போலீசார் விரட்டிச்சென்று பிடித்து பறிமுதல் செய்தனர்.

Update: 2019-08-06 22:15 GMT

அந்தியூர்,

அந்தியூர் அருகே ஆப்பக்கூடல் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் இருந்து இரவு நேரங்களில் மணல் கடத்தப்படுவதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு ஆப்பக்கூடல் போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் பூபதி தலைமையில் போலீசார் ஆப்பக்கூடல் பவானி ஆற்றின் கரையோர பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக லாரி ஒன்று வேகமாக வந்தது. இதனை கவனித்த போலீசார் லாரியை தடுத்து நிறுத்த முயன்றனர்.

ஆனால் அந்த லாரி அங்கு நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் போலீசார் மோட்டார் சைக்கிள் மற்றும் ஜீப்பில் அந்த லாரியை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர். ஆப்பக்கூடலை அடுத்த வள்ளியூர் பகுதியில் அந்த லாரியை போலீசார் மடக்கி பிடித்தனர். உடனே டிரைவர் லாரியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதைத்தொடர்ந்து லாரியை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் மணல் கடத்தப்பட்டு வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, மணல் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்து ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

மேலும் செய்திகள்