உடுமலையில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு; உறவினர்கள் சாலை மறியல்

உடுமலையில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தார். இதைத்தொடர்ந்து அவரது உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-08-06 23:15 GMT
உடுமலை,

உடுமலையை அடுத்துள்ள கண்ணமநாயக்கனூரை ்சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 25). திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. செல்வக்குமார் கட்டிட வேலை செய்து வந்தார். இவர் நேற்று அதே ஊரைச்சேர்ந்தவர்களுடன் உடுமலை நகரில் பொள்ளாச்சி சாலையில், உடுமலையைச்சேர்ந்த ஒருவர் கட்டிவரும் கடையின் கட்டிடத்தில் மேல் தளம் அமைக்கும் கான்கிரீட் கட்டுமான வேலைக்காக வந்திருந்தார். அந்த கட்டிடத்தில் கான்கிரீட் வேலைகள் நடந்து கொண்டிருந்தது.

இதற்கான ஜல்லி -சிமெண்ட் கலவை இரும்பு தொட்டியில் போடப்பட்டு ரோப் மூலம் மேலே கொண்டு செல்லப்பட்டு வந்தது. இதற்காக செல்வக்குமார் கட்டிடத்தின் கீழ் பகுதியில் இருந்து சிமெண்ட் கலவையை மேல் பகுதிக்கு அனுப்பி வைக்கும் வேலையை செய்துகொண்டிருந்தார். இந்த கட்டிடப்பணிகளுக்காக கட்டிட உரிமையாளர் தற்காலிக மின் இணைப்பு பெற்றுள்ளார்.அதன் மூலம் மோட்டார் பொருத்தி இந்த கான்கிரீட் போடும் பணிகள் நடந்து கொண்டிருந்தது.

அந்த இரும்பு தொட்டி அடுத்தடுத்து சிமெண்ட் கலவையை கொண்டு செல்வதற்காக கீழே அடிக்கடி இறக்கப்பட்டபோது கீழேதரைப்பகுதியில் இருந்த மின் வயர் சிறிது சிறிதாகபழுதடைந்துள்ளது. அதனால் இந்த பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி செல்வக்குமார் மீது மின்சாரம் பாய்ந்தது.

அவரை சக தொழிலாளர்கள் உடனடியாக உடுமலை அரசு மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர், செல்வக்குமார் இறந்து விட்டதாகத்தெரிவித்தார். இந்த சம்பவம் நேற்று மாலை 3.45 மணியளவில் நடந்துள்ளது. செல்வக்குமாரின் பிரேதம், பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவ மனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நடந்த நிலையில் கட்டிட உரிமையாளரோ, சிவில் என்ஜினீயரோ அங்கு வரவில்லை. அதனால் ஆத்திரமடைந்த செல்வக்குமாரின் உறவினர்கள் கட்டிட உரிமையாளரும், என்ஜினீயரும் அங்கு வரவேண்டும். தங்களுக்கு நியாயம் வழங்கவேண்டும் என்று கோரி அந்த கட்டிடத்தின் எதிரே பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாலை 6.40 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றிய தகவல் கிடைத்ததும் உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் ஆகியோர் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

இந்த இடம் தேசிய நெடுஞ்சாலையாதலால் பஸ்,லாரி,கார்,வேன் உள்ளிட்ட வாகனப்போக்குவரத்து அதிகம் இருக்கும். சாலைமறியல் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சாலையின் இரண்டு புறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. இதைத்தொடர்ந்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இந்த சாலை மறியல் நடந்து கொண்டிருந்தபோது இரவு 7.15 மணியளவில் பலத்தமழை கொட்டியது. அப்போதும் சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் மழையில் நனைந்து கொண்டே சாலைமறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் நீண்டநேரம் பேசினர். ஆனால் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தியபடி இருந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்திக்கொள்ளலாம்என்று போலீசார் கேட்டுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து இரவு 8.35 மணிக்கு சாலைமறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது. சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் பேச்சுவார்த்தைக்காக போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். இது தொடர்பாக ேபாலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்