மனநிலை பாதித்த தொழிலாளி தற்கொலைக்கு முயற்சி , ஆரணி போலீஸ் நிலையம் முன் பரபரப்பு

பணம் திருட்டுப்போனதாக கூறி போலீஸ் நிலையம் முன் மனநிலை பாதித்த தொழிலாளி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஆரணியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2019-08-08 22:30 GMT
ஆரணி,

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை அடுத்த கோட்டகரம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 54), தொழிலாளி. இவருக்கு 2 மனைவிகள். இதில் முதல் மனைவி கலசபாக்கம் அருகே வசித்து வருவதாகவும், அவரை பார்ப்பதற்காக ராமலிங்கம் தன்னிடம் இருந்த நகையை நம்பேடு கிராமத்தில் உள்ள நகை அடகு கடையில் ரூ.7 ஆயிரத்திற்கு வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து அவர் மதுஅருந்திவிட்டு பணத்துடன் ஆரணி புதிய பஸ் நிலையத்திற்கு வந்து இறங்கி பஸ் நிலையத்திலேயே போதையில் படுத்துவிட்டதாக தெரிகிறது. பின்னர் எழுந்து பார்த்த போது அவர் வைத்திருந்த பணத்தை காணவில்லை. இதனையடுத்த ராமலிங்கம் ஆரணி நகர போலீஸ் நிலையத்திற்கு சென்று தான் வைத்திருந்த ரூ.7 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டதாக புகார் தெரிவித்துள்ளார்.

அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை மற்றும் போலீசார் போதையில் வந்து கலாட்டா செய்கிறாயா? என்று விரட்டியுள்ளனர். இதனால் அவர், நான் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் என்னை வெளியே துரத்துகிறீர்களே எனச் சொல்லி போலீஸ் நிலையத்தின் முன்பு உள்ள மரத்தில் தான் அணிந்திருந்த வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்கிறேன் என மரத்தில் ஏறினார்.

பின்னர் போலீசார் மரத்தில் இருந்து அவரை கீழே இறக்கி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் அவருடைய மகன் அண்ணாமலையை வரவழைத்து கேட்ட போது எங்களிடம் அடகு வைப்பதற்கு எந்த நகையும் இல்லை. எனது தந்தை மனநிலை பாதிக்கப்பட்டவர். அவர் என்ன சொல்கிறோம் என தெரியாமல் எதையாவது சொல்லி விடுவார். அவர் கூறுவதுபோல் பணம் திருடப்படவில்லை. அவரிடம் ரூ.150-தான் இருந்தது என கூறினார்.

பின்னர் ராமலிங்கத்தை போலீசார் எச்சரித்து மகன் அண்ணாமலையுடன் அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்