தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, மருத்துவக் கல்லூரி மாணவ- மாணவிகள் ஆர்ப்பாட்டம் - மழையில் நனைந்தபடி கண்டன ஊர்வலம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, அரசு மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மழையில் நனைந்தபடி அவர்கள் கண்டன ஊர்வலமும் நடத்தினர்.;

Update:2019-08-09 04:30 IST
தேனி,

தேசிய மருத்துவ ஆணையம் அமைக் கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், எம்.பி.பி.எஸ். படித்து முடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கொண்டு வரப்பட உள்ள ‘நெக்ஸ்ட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தமிழகத்திலும் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டு, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகள் கடந்த 5-ந்தேதியில் இருந்து வகுப்புகளை புறக்கணித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நேற்று அரசு மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகள் நூற்றுக்கணக் கானவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

கலெக்டர் அலுவலகம் முன்பு அவர் கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாரல் மழை பெய்து கொண்டு இருந்தது. மழையில் நனைந்தபடியே அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான மசோதாவை கைவிட வேண்டும், ‘நெக்ஸ்ட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சக்திவேலிடம் மாணவ- மாணவிகள் தங்களின் கோரிக்கைகள் தொடர்பான மனுவை அளித்தனர்.

பின்னர், அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தாமரைக்குளம் கண்மாய் பகுதி வரை கண்டன ஊர்வலம் நடத்தினர். அப்போதும் மழை பெய்து கொண்டே இருந்தபோதிலும், மழையில் நனைந்தபடியே கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தின் போது சில மாணவ-மாணவிகள் குடை பிடித்தபடி சென்றனர்.

ஊர்வலத்தை தொடர்ந்து மாணவ- மாணவிகள் சிலர் கர்னல் ஜான்பென்னிகுவிக் பஸ் நிலையத்துக்கு சென்றனர். அங்கு பொதுமக்களை சந்தித்து தங்களின் கோரிக்கைகளை தெரிவித்து, போராட்டத்துக்கு ஆதரவு திரட்டினர்.

மேலும் செய்திகள்