வகுப்பறைக்குள் தண்ணீர் புகுந்தது, பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட கோரி கொட்டும் மழையில் பெற்றோர்கள் போராட்டம்
வகுப்பறைக்குள் தண்ணீர் புகுந்ததையடுத்து பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட கோரி கொட்டும் மழையில் பெற்றோர்கள் முற்றுகை-மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
சின்னமனூர்,
குச்சனூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. தொடக்கத்தில் இந்த பள்ளி 7 கட்டிடங்களில் செயல்பட்டு வந்தது. இங்கு ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வந்தனர். 8 ஆசிரியர்கள் இங்கு பணியில் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு இங்குள்ள 3 கட்டிடங்கள் மிகவும் பழமையானவை என்றும், இடியும் நிலையில் உள்ளன என்றும் கூறி பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அவற்றை இடித்துவிட்டனர். மேலும் விரைவில் அங்கு புதிய கட்டிடங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தனர்.
ஆனால் தற்போது வரை புதிதாக கட்டிடங்கள் அமைக்கப்படவில்லை. இதனால் மீதமுள்ள 4 கட்டிடங்களிலேயே பள்ளி தற்போது வரை செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடங்களின் மேற்கூரையும் சேதமடைந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குச்சனூர் பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிக்குள் மழைநீர் ஒழுகி வகுப்பறையில் தேங்கி நிற்கிறது.
இதனால் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் வகுப்பறைக்குள் தண்ணீர் தேங்கி நிற்பது குறித்து அறிந்த மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் நேற்று பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது பள்ளி நிர்வாகிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை ஏற்காத பெற்றோர்கள், உப்புக்கோட்டை-உத்தமபாளையம் சாலையில் கொட்டும் மழையில் குடை பிடித்தபடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பள்ளி வளாகத்தில் புதிய கட்டிடங்களை விரைவாக அமைக்க வேண்டும். தற்போது உள்ள கட்டிடங்களில் சேதமடைந்த மேற்கூரையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் விரைந்து வந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சேதமடைந்த மேற்கூரையை உடனே சீரமைக்கவும், பள்ளி வளாகத்தில் புதிய கட்டிடங்கள் அமைக்கவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.