கோம்பைத்தொழு அருகே, மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கோம்பைத்தொழு அருகே மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-08-09 23:00 GMT
கடமலைக்குண்டு,

கடமலை-மயிலை ஒன்றியம் கோம்பைத்தொழு அருகே மேகமலை அருவி அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக மேகமலை வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன்காரணமாக நேற்று முன்தினம் இரவு மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று காலையும் வெள்ளப்பெருக்கு நீடித்ததால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க மேகமலை வனத்துறையினர் தடை விதித்தனர்.

மேலும் அருவிக்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் திருப்பி அனுப்பினர். மேகமலை அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நீர் சிற்றாறு ஓடை கோம்பைத்தொழு, மண்ணூத்து, குமணன்தொழு, பொன்னன்படுகை ஆகிய கிராமங்களை கடந்து கடமலைக்குண்டு மூலவைகை ஆற்றில் கலந்தது.

கடந்த சில மாதங்களாக கடும் வெயில் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குமணன்தொழு, மயிலாடும்பாறை உள்ளிட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டது. தற்போது மேகமலை அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அந்த கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல வெள்ளிமலை வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இரு கரையை தொட்டபடி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. நேற்று காலை வருசநாடு அருகே தங்கம்மாள்புரம் கிராமத்தை கடந்த நீர்வரத்து மாலை மயிலாடும்பாறை வந்தடைந்தது. தொடர்ந்து வெள்ளிமலை வனப்பகுதியில் மழை பெய்து வருவதால் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

மேலும் செய்திகள்