விபத்தில் பிறர் சிக்காமல் இருப்பதற்காக சாலையில் சாய்ந்து கிடந்த தடுப்பு கம்பியை எடுத்த வாலிபர் வேன்மோதி பலி

விபத்தில் பிறர் சிக்காமல் இருப்பதற்காக சாலையில் சாய்ந்து கிடந்த தடுப்பு கம்பியை எடுத்த வாலிபர் வேன்மோதி பலியானார்.

Update: 2019-08-12 22:15 GMT
விராலிமலை,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் காலனியை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம் (வயது 35). நேற்று திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கொடும்பாளூர் பஸ் நிறுத்தம் அருகே சாலையில் தடுப்பு கம்பி சாய்ந்து கிடந்தது. இதைப்பார்த்த, மீனாட்சிசுந்தரம் யாராவது விபத்தில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக, அதனை எடுத்து நேராக வைக்க முயன்றார்.

அப்போது குற்றாலத்தில் இருந்து காரைக்காலை நோக்கி சென்ற சுற்றுலா வேன் மீனாட்சி சுந்தரத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

டிரைவர் மீது வழக்கு

தகவல் அறிந்த விராலிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்தில் இறந்த மீனாட்சிசுந்தரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக காரைக்காலை சேர்ந்த வேன் டிரைவர் யோகராஜ் (31) மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பிறர் சிக்காமல் இருப்பதற்காக, சாலையில் சாய்ந்து கிடந்த தடுப்பு கம்பியை எடுத்தபோது, விபத்தில் சிக்கி மீனாட்சி சுந்தரம் பலியானது, அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்