50 விவசாயிகளுக்கு பசுந்தீவனம் வளர்க்க ரூ.8½ லட்சம் மானியம் - கலெக்டர் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் 50 விவசாயிகளுக்கு பசுந்தீவனம் வளர்க்க ரூ.8½ லட்சம் மானியம் வழங்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் கதிரவன் தெரிவித்து உள்ளார்.

Update: 2019-08-12 21:45 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருந்ததாவது:-

தமிழக அரசு சார்பில் விவசாயிகளும், பெண்களும் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி கறவை மாடுகளின் உற்பத்தி திறன் மற்றும் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்கும், பசுந்தீவன உற்பத்தியை அதிகரிப்பதற்கும் மாநில தீவன அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தீவன வளர்ப்புக்கு போதுமான நிலமில்லாத கால்நடை வளர்ப்போருக்கு ஆண்டு முழுவதும் பயன்அடையும் வகையில் மண்ணில்லாத தீவன வளர்ப்பு அலகுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் ஒவ்வொரு அலகுகளுக்கும் 75 சதவீதம் மானியமாக அதிகபட்சம் ரூ.16 ஆயிரத்து 875, முதல் மாத விதை கொள்முதலுக்காக ரூ.2 ஆயிரத்து 700, பயிற்சிக்காக ரூ.200 என மொத்தம் ரூ.19 ஆயிரத்து 775 வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் 2018-2019-ம் ஆண்டில் 50 விவசாயிகளுக்கு பசுந்தீவனம் வளர்க்க 75 சதவீதம் மானியமாக ரூ.8 லட்சத்து 43 ஆயிரத்து 750 வழங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மக்காச்சோளம், கோதுமை, பார்லி போன்ற தானிய வகைகளை வளர்க்கலாம். குறைந்த இடத்தில், குறைந்த தண்ணீர் மட்டுமே தேவைப்படுகிறது. பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, ரசாயன உரம் போன்ற எதுவும் தேவையில்லை.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கதிரவன் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்