காஷ்மீர் பிரச்சினையில் மத்திய அரசின் முடிவை ரஜினிகாந்த் வரவேற்றது வருத்தமளிக்கிறது - கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி

காஷ்மீர் பிரச்சினையில் மத்திய அரசின் முடிவை நடிகர் ரஜினிகாந்த் வரவேற்றது வருத்தமளிக்கிறது என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.

Update: 2019-08-13 00:15 GMT
சிவகங்கை,

சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசு 303 உறுப்பினர்களையும், 50 கூட்டணி எம்.பி.களையும் கொண்டுள்ளது. தற்போது நடைபெற்ற தேர்தலுக்கு பின்னர் மற்ற கட்சி எம்.பி.க்களின் ஆதரவையும் சேர்த்து ஏறத்தாழ 400 எம்.பிக்களின் ஆதரவுடன் உள்ளது. இவ்வாறு அதிக மெஜாரிட்டியுடன் பாரதீய ஜனதா கட்சி உள்ளதால் அவர்கள் எந்த ஒரு சட்டத்தையும் நினைத்தவுடன் நிறைவேற்றுகின்றனர்.

இதற்கு முன்பு ஒரு சட்டம் கொண்டு வருவது என்றால் அது குறித்த அறிவிப்பு வந்தவுடன் அந்த சட்டம் தொடர்பான கருத்தை நாடாளுமன்ற குழுவின் ஒப்புதலுக்கு அனுப்புவார்கள். அவர்கள் இது பற்றி விவாதித்து முடிவு அறிவித்தவுடன் அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்கு கொண்டு வருவார்கள். ஆனால் இந்த அரசு அமைந்த இதுவரை பாராளுமன்ற குழுவை அமைக்கவில்லை. தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர உள்ளனர்.

இந்த சட்டம் காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்ட நல்ல திட்டமாகும். இதன் மூலம் அரசு செயல்பாடுகளை வெளிப்படையாக மக்கள் தெரிந்து கொள்ள முடியும். சில தனி நபர்களை தீவிரவாதி என்று அறிவிக்கும் நிலைபாட்டை மத்திய அரசு எடுத்துள்ளது. ஆனால் இது பெரும் ஆபத்தை விளைவிக்கும் செயலாகும். மருத்துவ கவுன்சில் தொடர்பான சட்டத்தினால் தமிழகத்திற்குரிய பிரதிநிதித்துவம் கிடைக்காது. இந்தியாவில் உள்ள டாக்டர்களில் 12 சதவீதம் பேர் தமிழர்கள்தான். அப்படி இருந்தும் புதிய சட்ட திருத்தத்தினால் நமக்குரிய பிரதிநிதித்துவம் கிடைக்காத நிலை உள்ளது.

மத்திய அரசு அவர்கள் நினைத்ததை செய்யும் நிலைக்கு வந்துள்ளனர். அதற்கு முன்னுதாரணம் காஷ்மீர் பிரச்சினை. இதுவரை யூனியன் பிரேதசங்களைதான் மாநிலமாக மாற்றி உள்ளனர். தற்போதுதான் முதல் முறையாக ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவின் இறையாண்மைக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனை காங்கிரஸ் கட்சியும், அதன் தோழமை கட்சியான தி.மு.க.வும்தான் எதிர்த்து வருகிறது.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் பேச்சு எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. தடித்த வார்த்தைகளால் யாரும் யாரையும் விமர்சிக்க கூடாது. காஷ்மீர் பிரச்சினையில் மத்திய அரசின் முடிவை நடிகர் ரஜினிகாந்த் வரவேற்றது வருத்தமளிக்கும் செயலாகும். ரஜினிகாந்த் இதேபோல் காவிரி, முல்லைப்பெரியாறு உள்ளிட்ட மற்ற பிரச்சினைகளுக்கும் கருத்து தெரிவிக்க வேண்டும். தொகுதி பிரச்சினைகள் குறித்து நான் சம்பந்தபட்ட அமைச்சர்களிடம் மனு கொடுத்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்