திருமணத்திற்கு முன் 2 பேரால் சிறுமி 2 முறை கர்ப்பம்.. பெற்றோர் செய்த அதிர்ச்சி சம்பவம்

சிறுமியின் குடும்பத்தினர், மற்றொரு 23 வயது நபருக்கு சிறுமியை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்த சூழலில், இந்த ஜோடி பாலியல் உறவில் ஈடுபட்டு உள்ளது.

Update: 2024-05-02 11:56 GMT

பால்கார்,

மராட்டியத்தின் பால்கார் மாவட்டத்தில் வசித்து வரும் 17 வயது சிறுமிக்கு நேர்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 23 வயது மாற்று மதம் சார்ந்த நபர் ஒருவருடன் சிறுமிக்கு நட்பு ஏற்பட்டு, பின்னர் அது காதலானது. இதன்பின்பு, இருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டதில், 2021-ம் ஆண்டில் சிறுமி கர்ப்பிணியானார்.

இதுபற்றி முதலில் வெளியே தெரியாவிட்டாலும், வயிறு பெருத்ததும் பெற்றோருக்கு சந்தேகம் வந்து சிறுமியிடம் கேட்டனர். இதில், சிறுமி கர்ப்பம் என தெரிய வந்ததும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே உஷாரான பெற்றோர் பள்ளியின் முதல்வர் மற்றும் சமூக பணியாளர் இருவரின் உதவியை நாடியுள்ளனர்.

7-ம் வகுப்பு வரையே படித்து, அதனையும் பாதியிலேயே கைவிட்ட அந்த சிறுமியை மும்பைக்கு கொண்டு சென்றனர். இதன்பின்னர், தனியார் மருத்துவமனையில் சிறுமியை சேர்த்து, பார்த்து கொண்டனர். 2021-ம் ஆண்டு செப்டம்பரில் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. சிறுமியிடம் வழக்கறிஞர் சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கி கொண்டார்.

அடுத்த நாள் அந்த குழந்தை சமூக பணியாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறுமியிடம் இந்த விசயம் பற்றி யாரிடமும் கூற கூடாது என எச்சரித்து உள்ளனர். 6 மாதங்களுக்கு பின் குழந்தையின் தந்தையை சிறுமி எப்படியோ தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

அப்போது அவர், சமூக பணியாளரிடம் ரூ.4 லட்சம் தந்திருக்கிறேன் என கூறியிருக்கிறார். சிறுமியை திருமணம் செய்து கொள்ள விருப்பமும் தெரிவித்து இருக்கிறார். ஆனால், பேரம் பேசியவர்கள் அந்த வாலிபரை மிரட்டி விலகி இருக்க கூறியுள்ளனர். நஷ்ட ஈடாக, பெற்றோர் மற்றும் சிறுமியின் மாமா தலா ரூ.1.5 லட்சமும், மீதமுள்ள ரூ.1 லட்சம் தொகையை சமூக பணியாளர் மற்றும் பலர் பகிர்ந்து கொண்டனர்.

இதனை எதிர்த்து பெற்றோரிடம் கேள்வி கேட்ட சிறுமியை, பாட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதன்பின்னர், மற்றொரு 23 வயது நபருக்கு திருமணம் செய்து வைக்க சிறுமியின் குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர். இந்த சூழலில், இந்த ஜோடி பாலியல் உறவில் ஈடுபட்டு உள்ளது.

இதில், சிறுமி மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார். ஆனால், சிறுமியின் முதல் கர்ப்பம் மற்றும் குழந்தை பற்றி அறிந்த அந்த வாலிபர், சிறுமியை திருமணம் செய்ய மறுத்து விட்டார். இதனால், பெற்றோரின் வீட்டுக்கு சிறுமி திரும்பி விட்டார். பின்பு, தெரிந்தவர் ஒருவர் உதவியுடன் சிறுமிக்கு 2-வது முறையாக கடந்த மார்ச்சில் குழந்தை பிறந்தது.

சிறுமியின் பெற்றோர், இந்த ஆண் குழந்தையை விற்பதற்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால், மனமுடைந்த அந்த சிறுமி வீட்டை விட்டு வெளியேறி, மற்றொரு சமூக ஊழியர் ஒருவரின் உதவியுடன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, பள்ளி முதல்வர், 2 பெண் மருத்துவர்கள், ஒரு சமூக பணியாளர், ஒரு வழக்கறிஞர், பெற்றோர் மற்றும் பலர் என 16 பேருக்கு எதிராக போக்சோ சட்டம் மற்றும் பாலியல் பலாத்காரம், குழந்தை விற்பனை செய்ததற்காக சிறார் நீதி சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில், பெண் குழந்தையின் இருப்பிடம் மற்றும் அதனை விற்பனை செய்வதற்கு உதவிய வழக்கறிஞர் ஆகியோரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்