சங்கராபுரம் விதவை பெண்ணுடன் காரில் சாராயம், மதுபாட்டில்கள் கடத்தியது ஏன்? போலீஸ் இன்ஸ்பெக்டர் பற்றி பரபரப்பு தகவல்

புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு சங்கராபுரத்தை சேர்ந்த விதவை பெண்ணுடன் காரில் சாராயம், மதுபாட்டில்கள் கடத்தி வந்த கடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2019-08-12 22:45 GMT
கடலூர்,

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் சுந்தரேசன். இவரும், சாராய வியாபாரியான விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சூளாங்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நடராஜன் மனைவி சமுத்திரக்கனி(வயது 48) என்பவரும் காரில் புதுச்சேரியில் இருந்து 144 மதுபாட்டில்கள் மற்றும் 30 லிட்டர் சாராயத்தை கடலூருக்கு கடத்தி வந்துகொண்டிருந்தனர்.

அப்போது கடலூர் உண்ணாமலை செட்டிச்சாவடி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். புதுச்சேரியில் இருந்து வந்த அனைத்து வாகனங்களையும் மறித்து தீவிர சோதனை நடத்தினர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன், சோதனை சாவடி அருகிலேயே காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். உடனே சோதனை சாவடியில் பணியில் இருந்த போலீசார், அந்த காரில் இருந்த சமுத்திரக்கனியை பிடித்தனர். மேலும் மதுபாட்டில்கள், சாராயம், இதை கடத்த பயன்படுத்திய கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து கடலூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சமுத்திரக்கனியை கைது செய்தனர். தப்பி ஓடிய இன்ஸ்பெக்டர் சுந்தரேசனை வலைவீசி தேடி வருகின்றனர். வேலியே பயிரை மேய்ந்த கதைபோல மதுகடத்தலை தடுக்க வேண்டிய போலீஸ் இன்ஸ்பெக்டரே மதுபாட்டில்களை கடத்தி வந்தது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சாராய வியாபாரி சமுத்திரக்கனியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-

இன்ஸ்பெக்டர் சுந்தரேசன், விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவில் இருந்தபோதே சாராய வியாபாரி சமுத்திரக்கனியுடன் பழக்கம் ஏற்பட்டுள் ளது. விதவையான சமுத்திரக்கனிக்கு உதவி செய்யும் நோக்கத்தில் புதுச்சேரியில் இருந்து அவ்வப்போது மதுபாட்டில்கள் மற்றும் சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்து அவரிடத்தில் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

சுந்தரேசன் இன்ஸ்பெக்டர் என்பதால் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள், சாராயத்தை வாகனத்தில் கடத்தி வருவதில் எந்த சிரமமும் ஏற்படவில்லை. சோதனை சாவடியிலும் அவரது காரை, பணியில் இருக்கும் போலீசார் சோதனை செய்வது கிடையாது. இதனால் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன், சமுத்திரக்கனிக்கு உதவி செய்துள்ளார். இவ்வாறு கடத்தி வரப்படும் மதுபாட்டில்கள், சாராயத்தை சமுத்திரக்கனி அதிக விலைக்கு விற்று, நல்ல லாபம் சம்பாதித்து வந்தார். இன்ஸ்பெக்டர் சுந்தரேசனின் பழக்கத்தை பயன்படுத்தி, சமுத்திரக்கனி இதை ஒரு தொழிலாகவே செய்து வந்துள்ளார்.

இது தவிர இன்ஸ்பெக்டர் மீது பல்வேறு புகார் வந்ததையடுத்து அவரை விழுப்புரத்தில் இருந்து கோவைக்கு இடமாற்றம் செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து கடலூர் மாவட்டத்துக்கு சுந்தரேசன் இடமாற்றம் செய்யப்பட்டார். இங்கிருந்தும் சமுத்திரக்கனியுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அவருக்கு புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் கடத்தலில் ஈடுபட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் மீது முதற்கட்டமாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக அவரை சஸ்பெண்டு செய்ய உயர் அதிகாரிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சஸ்பெண்டு செய்யப்பட்டதும், இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் மீது மற்ற நடவடிக்கைகள் தொடரும் என்றார். 

மேலும் செய்திகள்