கிராம சபை கூட்டங்களை சரியான முறையில் நடத்த வேண்டும் - 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கிராமசபை கூட்டங்களை சரியான முறையில் நடத்த வேண்டும் என்று 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-08-13 21:45 GMT
திருவண்ணாமலை, 

சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, பல இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கலெக்டர் கந்தசாமியிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து நேற்று கலெக்டர் அலுவலகத்தில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தநிலையில் பகல் 12 மணி அளவில் 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் நுழைவு வாயில் முன்பு நின்று கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சரியான முறையில் கிராமசபை கூட்டங்களை நடத்த வேண்டும் என்று கோஷமிட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் அருள் நிருபர்களிடம் கூறியதாவது:-

விவசாயிகளுக்கு எதிராக அரசு கொண்டு வரும் திட்டங்கள் வேண்டாம் என்று கிராம சபை கூட்டங்களில் நாங்கள் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை வைத்தோம். ஆனால் அதிகாரிகள் யாரும் தீர்மானத்தை பதிவு செய்வதில்லை. பஞ்சாயத்து ராஜ் சட்டம் நமக்கு அளித்த மிகப்பெரிய ஜனநாயக உரிமை கிராம சபை கூட்டம் தான்.

கிராம சபையில் இயற்றப்படும் தீர்மானங்களை ஆதாரமாக கொண்டு சுப்ரீம் கோர்ட்டு கிராம சபை கூட்டங்களை கவுரவப்படுத்தி வருகிறது. நாங்கள் 8 வழிச்சாலைக்கு எதிராக கூட்டத்தில் பதிவு செய்ய கோரிக்கை வைக்கிறோம். ஆனால் அதிகாரிகள் தீர்மானத்தை பதிவு செய்வதில்லை. அவர்களிடம் கேட்டால் மாவட்ட கலெக்டர் வாய்மொழி உத்தரவு போட்டுள்ளதாக கூறுகின்றனர். எனவே கிராம சபை கூட்டங்களை சரியான முறையில் நடத்த வேண்டும். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அவர்கள் கலெக்டர் கந்தசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். 

மேலும் செய்திகள்