மஞ்சூரில் கொண்டை ஊசி வளைவுகளில் விபத்து அபாயம், பஸ்களின் பின்புற பகுதி சாலைகளில் உரசுவதால் பயணிகள் பீதி

மஞ்சூரில் கொண்டை ஊசி வளைவுகளில் விபத்து அபாயம் நிலவுகிறது. பஸ்களின் பின்புற பகுதி சாலைகளில் உரசுவதால் பயணிகள் பீதி அடைகின்றனர்.

Update: 2019-08-14 22:30 GMT
மஞ்சூர்,

மலை மாவட்டமான நீலகிரியில் சாலைகள் பெரும்பாலும் கொண்டை ஊசி வளைவுகளை கொண்டவை. இங்கு கிராமப்புறங்களுக்கு சிறிய அளவிலான பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் விபத்துகள் தவிர்க்கப்படுவதுடன், பொதுமக்கள் பாதுகாப்பாக பயணித்து வருகின்றனர். ஆனால் நீலகிரி மாவட்ட போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த சில மாதங்களாக கிராமப்புறங்களுக்கு முழு நீள அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கொண்டை ஊசி வளைவுகள் மிகுதியாக காணப்படுவதால், அந்த பஸ்களை டிரைவர்கள் மிகவும் சிரமத்துடன் ஓட்டி செல்கின்றனர். இதனால் பயண நேரம் அதிகரிக்கிறது. மேலும் கொண்டை ஊசி வளைவுகளில் இயக்கப்படும்போது, வேறு வழியின்றி பொதுமக்கள் உயிரை பணயம் வைத்து பயணிக்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதும் தொடர் கதையாகிறது.

இந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு மஞ்சூர் அருகே உள்ள எடக்காடு கிராமத்தில் இருந்து கோவை செல்லும் அரசு பஸ்சை டிரைவர் கிரு‌‌ஷ்ணன் என்பவர் ஓட்டி சென்றார். அதில் 10 பயணிகள் அமர்ந்து இருந்தனர். சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் முக்கிமலை கோவில் அருகில் உள்ள முதல் கொண்டை ஊசி வளைவில் டிரைவர் பஸ்சை திருப்பினார்.

அப்போது பஸ்சின் பின்புற கீழ்பகுதி சாலையில் உரசியது. மேலும் சாலையில் சேறும், சகதியும் காணப்பட்டதால், பஸ் கவிழும் நிலைக்கு சென்றது. இதனால் பயணிகள் பீதி அடைந்தனர். உடனே சுதாரித்துக்கொண்ட டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் அதிர்‌‌ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து அரை மணி நேரம் தாமதமாக பஸ் அங்கிருந்து ஓட்டி செல்லப்பட்டது. இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து சாலைகளில் சேறும், சகதியும் காணப்படுகிறது. ஏற்கனவே மஞ்சூரில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் முழு நீள அரசு பஸ்கள் செல்லும்போது, சரியாக திருப்ப முடியாமல் டிரைவர்கள் தவிக்கின்றனர். தற்போது சாலைகளில் சேறும், சகதியுமாக உள்ளதால், பஸ்களின் பின்புற கீழ்பகுதி சாலைகளில் உரசுகின்றன. அப்போது விபத்து ஏற்பட்டு விடுமோ? என்று பீதியில் பயணிக்க வேண்டி உள்ளது. எனவே நீலகிரி மாவட்டத்தில் முழு நீள அரசு பஸ்களை விடுத்து, சிறிய அளவிலான பஸ்களை மட்டுமே இயக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்