திருப்பூரில் பள்ளிக்கு சென்ற 4-ம் வகுப்பு மாணவியை கடத்தியதாக தகவல் பரவியதால் பரபரப்பு

திருப்பூரில் பள்ளிக்கு சென்ற 4-ம் வகுப்பு மாணவியை கடத்தியதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-08-14 22:30 GMT
அனுப்பர்பாளையம்,

திருப்பூர் போயம்பாளையம் சக்திநகர் 2-வது வீதியில் வசித்து வருபவர் அய்யந்துரை. இவருடைய மனைவி திரவுபதி. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 8 வயதில் ஒரு மகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இதில் மூத்த மகனும், மகளும் தந்தையுடனும், இளைய மகன் தாயுடனும் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் அருகில் உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்த மாணவி நேற்று முன்தினம் காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்றாள். மாலை பள்ளி முடிந்து நீண்ட நேரமாகியும் அந்த மாணவி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அய்யந்துரை அக்கம்பக்கத்தினரின் வீடுகள் மற்றும் உறவினர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தார். ஆனால் மாணவி அங்கு செல்லவில்லை.

இதனால் அவர் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பள்ளி அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்டனர். அதில் மாயமான மாணவியை ஒரு பெண் அழைத்து செல்வது போல காட்சி பதிவாகி இருந்தது. இதனால் பள்ளி மாணவியை ஒரு பெண் கடத்தி சென்றதாக தகவல் பரவியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மாணவியை அழைத்து சென்ற அந்த பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது அவர் மாணவியின் தாய் திரவுபதி என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அய்யந்துரையை அழைத்து சிறுமியை தாய்தான் அழைத்து சென்றுள்ளார் என்பதை உறுதிப்படுத்தினார்கள். அதன் பிறகே இந்த கடத்தல் சம்பவத்துக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டது.

மேலும் செய்திகள்