சுதந்திர தின விழா கொண்டாட்டம்: கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார் - 129 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

கோவையில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் ராஜாமணி தேசிய கொடி ஏற்றினார். அவர், 129 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2019-08-15 21:30 GMT
கோவை,

நாடு முழுவதும் 73-வது சுதந்திர தின விழா நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் அவினாசி ரோட்டில் உள்ள வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில், மாவட்ட கலெக்டர் ராஜாமணி கலந்து கொண்டு நேற்று காலை 9.05 மணியளவில் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர், காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மேலும் அவர், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் தியாகிகளின் மனைவிகளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்.

இதையடுத்து 129 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 27 லட்சத்து 7ஆயிரத்து 251 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராஜாமணி வழங்கினார். அதன்பிறகு பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவரும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக்பள்ளி, விளாங்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, விளாங்குறிச்சி ஆர்.ஜே. மெட்ரிக் பள்ளி, லட்சுமி நாயக்கன்பாளையம் எஸ்.ஆர்.என்.வி. மேல்நிலைப்பள்ளி, கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி, குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, ராஜவீதி சி.சி.எம்.ஏ. அரசு மேல்நிலைப்பள்ளி, வரதராஜபுரம் டி.என்.ஜி.ஆர். மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. மகளிர் மேல் நிலைப்பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பரதநாட்டியம், கோலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், கிராமிய பாடல்கள், கரகாட்டம், தேசபக்தி பாடல்கள், பிரமீடு போன்ற தோற்றம் அமைத்து நடனம் மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண், டி.ஐ.ஜி. கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார், துணை கமிஷனர்கள் பாலாஜி சரவணன், பெருமாள் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாநகராட்சி தனி அதிகாரி ஷ்ரவன்குமார் ஜடாவத் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக அவர், மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார்.

இதில், துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அதைத்தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாநகராட்சியில் 25 ஆண்டுகளாக எந்த வித புகார்களும் இன்றி பணியாற்றிக் கொண்டிருக்கும் 7 ஊழியர்களுக்கு வெகுமதியாக ரூ.2 ஆயிரம் மற்றும் நற்சான்றிதழ் ஷ்ரவன்குமார் ஜடாவத் வழங்கினார். இதேபோல் மாநகராட்சியில் சிறப்பாக செயல்பட்ட 50 ஊழியர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

மசக்காளிபாளையம், செல்வபுரம், ரத்தினபுரி ஆகிய பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் இந்த ஆண்டு பள்ளி மாணவ, மாணவியர்கள் சேர்க்கை அதிகரித்து உள்ளதை ஊக்குவிக்கும் விதமாக மாநகராட்சி துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி இப்பள்ளிகளில் உள்ள நூலகங்களுக்கு 20 புத்தகங்களை வழங்கினார்.

கோவை விமான நிலையத்தில் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு விமான நிலைய இயக்குனர் மகாலிங்கம் தலைமை தாங்கி தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் விமான நிலைய பாதுகாப்பு பொறுப்பை ஏற்றிருக்கும் மத்திய தொழிற்பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் மன்மோகன் சிங் மற்றும் விமான நிலைய அதிகாரிகள், ஊழியர்கள், பாதுகாப்பு படையினர் கலந்து கொண்டனர்.

மேலும் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடந்தன. முன்னதாக மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை விமான நிலைய இயக்குனர் மகாலிங்கம் ஏற்றுக் கொண்டார்.

கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் சுதந்திர தின விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றி வைத்து பேசினார். இந்த நிகழ்ச்சியில், முதலாவது சார்பு நீதிமன்ற நீதிபதி குணசேகரன், 3-வது சார்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா, கோவை வக்கீல்கள் சங்க தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன், செயலாளர் சுதீஷ், துணை தலைவர் ரிச்சர்டு, அரசு பிளடர் தாமோதரன், அரசு வக்கீல் கனகராஜ் மற்றும் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்