திருக்குறள் வாரம்: மெரினா கடற்கரையில் இன்று நடைபெற இருந்த இசை நிகழ்ச்சி தள்ளிவைப்பு
இந்த இசை நிகழ்ச்சி கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், சென்னை மெரினா கடற்கரையில் திருக்குறள் மற்றும் பழந்தமிழ் இலக்கியங்களை மையமாகக் கொண்ட இசை நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இதில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் பெரும் முயற்சியால் கடந்த பல ஆண்டுகளாகத் திட்டமிட்டு இசையமைக்கப்பட்ட திருக்குறளும், தமிழ் இலக்கிய பாடல்களும் இசை வடிவில் மக்கள் ரசிக்கும் வகையில் கொண்டாட்ட இசையாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த இசை நிகழ்ச்சியானது 11.1.2026 அன்று (இன்று) ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என அறிவித்திருந்தது. இதன் காரணமாக இன்று மெரினா கடற்கரையில் நடைபெற இருந்த நிகழ்ச்சியை சென்னை மாநராட்சி அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை மெரினா கடற்கரையில் இன்று (11.01.2026) மாலை நடைபெறுவதாக இருந்த திருக்குறள் பழந்தமிழிலக்கிய இசை நிகழ்ச்சி கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 18.01.2026 அன்று மாலை ஒத்திவைக்கப்பட்டுள்ளது”. என தெரிவிக்கப்பட்டுள்ளது.