பாம்பன் அருகே பலத்த காற்று: படகிலிருந்து கடலில் விழுந்த 2 மீனவர்கள் மாயம்
ராமேசுவரம் அருகே பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் இருந்து நம்புச்சாமி என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகு ஒன்றில் 5 மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர்.;
ராமேசுவரம் அருகே பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் இருந்து நம்புச்சாமி என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகு ஒன்றில் சரத்குமார் (வயது 28), டைசன் (32), ரீகன், டோனி, வெள்ளைச்சாமி ஆகிய 5 மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் மீன்பிடித்தனர்.
ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பலத்த காற்று வீசி வரும் நிலையில், கடல் சீற்றமாகவும் காணப்படுகிறது. இதையும் பொருட்படுத்தாது அவர்கள் மீன்பிடித்துள்ளனர். இந்த நிலையில் கடல் சீற்றத்தில் அவர்களது நாட்டுப்படகு சிக்கியது. அப்போது அந்த படகில் இருந்த மீனவர்கள் சரத்குமார், டைசன் ஆகிய 2 பேரும் தவறி கடலில் விழுந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக மீனவர்கள், அவர்களை மீட்க முயன்றனர்.
கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் 2 மீனவர்களையும் மீட்க முடியாமல் தவித்தனர். நீண்ட நேரம் போராடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து மற்ற 3 மீனவர்களும் கரை திரும்பினர். 2 மீனவர்கள் மாயம் குறித்து மீன்வளத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து பாம்பனில் இருந்து நாட்டுப்படகுகளில் சென்று தேடும் பணியில் மற்ற மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுவதால் தேடுவதில் மிகுந்த சிரமம் உள்ளதாக கூறப்படுகிறது.
தேடும் பணியில் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் ஈடுபட்டு, 2 மீனவர்களையும் விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாட்டுப்படகு மீனவர் சங்கத்தலைவர் எஸ்.பி.ராயப்பன், ஏ.ஐ.டி.யு.சி. மீனவர் சங்க தலைவர் செந்தில்வேல் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி தேடும் பணி தொடங்கி இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மாயமான மீனவர்களில் சரத்குமார் பாம்பன் சின்னப்பாலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். மற்றொரு மீனவர் டைசன் தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது.