வாகனங்களை மறித்து பணம் பறிப்பவர்களுக்கு பின்னணியில் யார் இருந்தாலும் நடவடிக்கை - கோவை போலீஸ் கமிஷனர் சுமித் சரண் எச்சரிக்கை

வாகனங்களை மறித்து பணம் பறிப்பவர்களுக்கு பின்னணியில் யார் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை போலீஸ் கமிஷனர் சுமித் சரண் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Update: 2019-08-15 21:45 GMT
கோவை,

கோவை பீளமேடு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னியம்பாளையம் பகுதியில் சோதனைச்சாவடி உள்ளது. குற்றத்தடுப்புக்காக அமைக்கப்பட்ட இந்த சோதனைச்சாவடி கடந்த சில நாட்களாக வசூல் மையமாக மாறி வருவதாக புகார் எழுந்து உள்ளது.

அந்த வகையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை போலீசாரின் உதவியுடன் சில ஆசாமிகள் வழிமறித்து ஆவணங்களை காண்பிக்குமாறு கேட்கிறார்கள். பின்னர் சோதனைச்சாவடி மையத்தின் அறைக்குள் அழைத்து சென்று விசாரணை என்ற பெயரில் பணம் பறிப்பதாக வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.மேலும் வாகன நெரிசல் மிகுந்த சின்னியம்பாளையம் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை. மாறாக வாகனங்களை வழி மறிப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேலும் பணம் பறிக்கும் நிகழ்வுகள் நடப்பதாக போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்யப்பட்டுள் ளது. இந்த புகார் குறித்து கோவை போலீஸ் கமிஷனர் சுமித் சரணிடம் கேட்டபோது, வாகனங்களை மறித்து சோதனை நடத்த தனி நபர்கள் யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி பின்னணியில் யார் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகன சோதனை என்ற பெயரில் போலீசார் மாமூல் வசூலித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கோவையில் வாகனங்களை வழிமறித்து பணம் பறிக்கும் சம்பவம் நடப்பது வாகன ஓட்டுனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்