அத்திவரதரை தரிசிக்க சென்ற தர்மபுரி மாவட்ட 3 பெண்கள் விபத்தில் சாவு- டயர் வெடித்து சாலை தடுப்பு மீது ஏறிய கார் மீது அரசு பஸ் மோதியது

அத்திவரதரை தரிசிக்க தர்மபுரி மாவட்ட பக்தர்கள் ஒரு காரில் வந்தபோது, டயர் வெடித்து சாலையின் நடுவே உள்ள தடுப்பின் மீது ஏறி நின்றபோது, கண்ணிமைக்கும் நேரத்தில் வந்த அரசு பஸ் கார் மீது மோதியது. அதில் 3 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-08-15 22:00 GMT
பனப்பாக்கம், 

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி (வயது 40). இவர் உள்பட 10 பேர் காஞ்சீபுரத்தில் நடந்து வரும் அத்திவரதர் வைபவத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்வதற்காக ஒரு காரில் புறப்பட்டு வேலூர் மாவட்டம் வழியாக காஞ்சீபுரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை, அசோக்குமார் (35) என்பவர் ஓட்டினார்.

வேலூர் மாவட்ட எல்லையான அவளூர் அருகே கார் வந்தபோது, ஓடும் காரின் டயர் திடீரென வெடித்தது. அதில் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார், தேசிய நெடுஞ்சாலையின் தடுப்பு மீது ஏறி நின்றது. அந்த வழியாக கண்ணிமைக்கும் நேரத்தில் சென்னையில் இருந்து திருப்பத்தூரை நோக்கி வந்த அரசு பஸ் ஒன்று கார் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த பக்தர்களான நந்தினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் காரில் பயணம் செய்த குண்டூர் பகுதியைச் சேர்ந்த பக்தர்களான சந்தியா (50), பழனியம்மாள் (50), ஜீவா (32), வெண்ணிலா (50), மாரியம்மாள் (50), சின்னசாமி (42), சாந்தி (35), மாது (47), கார் டிரைவர் அசோக்குமார் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

அங்கிருந்தவர்கள் ஓடி வந்து, படுகாயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்தியா, பழனியம்மாள் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த 7 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நந்தினியின் பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து அவளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்