திருவள்ளூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

திருவள்ளூரில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கலந்துகொண்டு கொடியேற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2019-08-15 22:50 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் வண்ண பலூன்களையும், வெண்புறாக்களையும் பறக்கவிட்டு திறந்தவெளியில் வாகனத்தில் நின்றபடி போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டு அணிவகுப்பு மரியாதை, என்.சி.சி. மற்றும் சாரணர் இயக்க மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

அதை தொடர்ந்து கலெக்டர் சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் வகையில் கைத்தறி ஆடையை அணிவித்து பரிசுகளை வழங்கி பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றியதற்காக பாராட்டுகளை தெரிவித்த கலெக்டர் அவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இதனை தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் நடனம், நாடகம், பரதநாட்டியம், சிலம்பம் யோகா போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை திரளான பொதுமக்கள் அரசு அலுவலர்கள் கண்டுகளித்தனர்.

அதில் சிறப்பாக செயல்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் வாழ்த்துகளை தெரிவித்து சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், திருவள்ளூர் சப்-கலெக்டர் ரத்னா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பன்னீர்செல்வம் மற்றும் திரளான அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் மாவட்ட நீதிபதி செல்வநாதன் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார். திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் மாரிச்செல்வி தேசியகொடியை ஏற்றிவைத்தார். திருவள்ளூர் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் சீனிவாசன் தேசியகொடியை ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். செவ்வாப்பேட்டையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட அரசு ஆதிதிராவிடர் நல குழு உறுப்பினர் ஜெய தென்னரசு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றிவைத்து பள்ளி மாணவர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் சுரேஷ்பாபு தேசிய கொடியை ஏற்றிவைத்து அருகே உள்ள இலங்கை அகதி முகாமை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். கும்மிடிப்பூண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் கோர்ட்டு வளாகத்தில் நீதிபதி அலீசியா தேசிய கொடியை ஏற்றினார். கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் எம்.எல்.ஏ. கே.எஸ்.விஜயகுமார் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராம்குமாரும், சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் வெற்றி அரசு, தமிழக அரசு சாலை போக்குவரத்து நிறுவனத்தில் துணை இயக்குனர் முரளிதரன் ஆகியோர் தேசியகொடியை ஏற்றினர். புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் ஊராட்சி செயலாளர் சிட்டிபாபு தேசிய கொடியை ஏற்றிவைத்து இனிப்புகளை வழங்கினார்.

பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டையில் சுதந்திர தினவிழாவையொட்டி அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முன்னாள் எம்.எல்.ஏ. இ.எஸ்.எஸ்.ராமன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் நகர பிரமுகர்கள் சக்கரப்பன், மாணிக்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பள்ளிப்பட்டு பேரூராட்சியில் செயல் அலுவலர் கலாதரன் தேசிய கொடி ஏற்றினார். பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மீனா தேசிய கொடி ஏற்றினார்.

ஊத்துக்கோட்டை குற்றவியல் மற்றும் உரிமையியல் கோர்ட்டில் வக்கீல்கள் சங்க தலைவர் செஞ்சிநாதன் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். செயலாளர் சாமுவேல், பொருளாளர் மகேந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் அனுமந்தன், பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் ரவிசந்திரபாபு தேசியகொடியை ஏற்றினர்.

திருநின்றவூர் பேரூராட்சியில் செயல் அலுவலர் விஜயா தேசியகொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அங்கிருந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள், மகளிர் குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தேசிய கொடியை ஏற்றி வைத்த பின்னர் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக அந்த பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

மேலும் செய்திகள்