திருவாடானை பகுதியில் சூறாவளி காற்று, மரங்கள் வேரோடு சாய்ந்தன

திருவாடானை பகுதியில் சூறாவளி காற்று வீசியது இதில் வேரோடு சாய்ந்தன.

Update: 2019-11-12 22:45 GMT
தொண்டி,

திருவாடானை தாலுகாவில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளி காற்று வீசியது. இதில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மங்களக்குடி அருகே உள்ள கண்ணன்புஞ்சை கிராமத்தில் வீசிய பலத்த சூறாவளி காற்றின் காரணமாக மரம் சாய்ந்து விழுந்ததில் அருகில் இருந்த ஒரு வீடு சேதம் அடைந்தது. இதேபோல தொண்டி பழைய போலீஸ் நிலையம் முன்பு கிழக்கு கடற்கரை சாலை அருகே நின்ற வேப்பமரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து தடைபட்டது. அதனைத்தொடர்ந்து தொண்டி போலீசார் வேறு வழியாக மாற்றி அமைத்து போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இதுகுறித்த தகவலின்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான வீரர்கள் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

இதேபோல மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கல்லூர் கிராமத்தின் அருகே சாலை ஓரத்தில் நின்ற மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. அந்த நேரத்தில் அருகில் யாரும் இல்லாததால் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை. இதுதவிர இந்த தாலுகாவில் உள்ள பல்வேறு இடங்களில் பலத்த சூறாவளி காற்றினால் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. மேலும் கூரை வீடுகள், மின் கம்பங்களும் சேதமடைந்தன.

மேலும் செய்திகள்