திருப்பரங்குன்றம் ரெயில்வே பாலத்தில் அரசு பஸ்-ஷேர் ஆட்டோ மோதல்: 30 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட பெண் உள்பட 2 பேர் பலி

திருப்பரங்குன்றம் ரெயில்வே பாலத்தில் அரசு பஸ்சும், ஷேர் ஆட்டோவும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 30 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2019-11-09 22:30 GMT
திருப்பரங்குன்றம்,

மதுரை ஆரப்பாளையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திருமங்கலத்திற்கு ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. மதுரை அருகே உள்ள மானூத்தூரை சேர்ந்த டிரைவர் ராஜசேகர் (வயது 39) பஸ்சை ஓட்டிச் சென்றார். இதே வேளையில் மதுரை திருநகரில் இருந்து 5 பேரை ஏற்றிக்கொண்டு திருப்பரங்குன்றம் நோக்கி ஒரு ஷேர் ஆட்டோ வந்து கொண்டிருந்தது.

மதுரை அவனியாபுரம் பெரியசாமி நகரை சேர்ந்த டிரைவர் மணி (32) ஷேர் ஆட்டோவை ஓட்டி வந்தார். திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் தேவிநகர் ரெயில்வே மேம்பாலத்தின் மைய பகுதியில் அந்த அரசு பஸ்சும், ஷேர் ஆட்டோவும் வந்தன. அப்போது அரசு பஸ் வேறொரு வாகனத்தை முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது. இதில் திடீரென்று நிலை தடுமாறி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ்சானது, கண் இமைக்கும் நேரத்தில் ஷேர் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. பின்னர் அந்த பஸ் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி நின்றது.

பஸ் மோதியதில் ஆட்டோவில் இருந்த ஒரு பெண், பாலத்தின் உச்சியில் இருந்து கீழே 30 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். ஷேர் ஆட்டோவில் பயணித்த மற்றவர்கள் பாலத்தின் மேல்பகுதியில் படுகாயத்துடன் கிடந்தனர். அவர்களில் திருநகர் மகாலட்சுமி காலனியை சேர்ந்த எல்.ஐ.சி. முகவர் வீரராகவன்(60) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் திருப்பரங்குன்றம், திருநகர் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

தூக்கி வீசப்பட்ட பெண் உள்பட விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சற்று நேரத்தில் அந்த பெண்ணும் உயிரிழந்ததால் இந்த சம்பவத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 2-ஆனது. போலீசார் விசாரணையில், அந்த பெண் மதுரை மாவட்டம் எழுமலையை சேர்ந்த சாரதா (47) என தெரியவந்தது.

இதற்கிடையே விபத்து காரணமாக அந்த பாலத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் மாற்று பாதையில் வாகனங்களை திருப்பி விட்டனர்.

இந்த விபத்து தொடர்பாக மதுரை திடீர் நகர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்