விடுதி அறையில் சென்னை ஐ.ஐ.டி. மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

சென்னை ஐ.ஐ.டி. மாணவி விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-11-09 23:15 GMT
சென்னை,

கேரள மாநிலம் கொல்லம் அடுத்துள்ள கிளி கொல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா லதீப்(வயது 18). இவர், சென்னை ஐ.ஐ.டி.யில் எம்.ஏ. முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். இவர் ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள சரவியூ விடுதியில் அறை எண் 349-ல் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.

நேற்றுமுன்தினம் இரவு பாத்திமா லதீபுக்கு அவரது தாயார் சஜிதா லதீப் போன் செய்துள்ளார். ஆனால் பாத்திமா லதீப் போனை எடுக்கவில்லை. நேற்று காலையில் போன் செய்தும் அவர் போனை எடுக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த சஜிதா லதீப் தனது மகளின் தோழிகளுக்கு போன் செய்து, பாத்திமா லதீப் போன் எடுக்காத விவரத்தை கூறினார். இதையடுத்து தோழிகள் அவரது அறை கதவை தட்டினர். வெகு நேரமாகியும் அவர் கதவை திறக்காததால், விடுதி ஊழியர்களிடம் இது குறித்து தெரிவித்தனர்.

விடுதி ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பாத்திமா லதீப், நைலான் கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த விடுதி ஊழியர்களும், அவரது தோழிகளும் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த கோட்டூர்புரம் போலீசார் மாணவியின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், பாத்திமா லதீப் முதன்முறையாக தனது குடும்பத்தை பிரிந்து தனியாக வெளியே தங்கி இருப்பதாகவும், அதனால் அவர்களை நினைத்து தனிமையில் வாடி வந்ததாகவும் தெரிகிறது.கடந்த வாரம் நடந்த கல்லூரி வளாகத்தேர்வில் அவர் குறைவான மதிப்பெண்கள் எடுத்துள்ளதாகவும், சில நாட்களாக மிகுந்த மனவருத்தத்தில் இருந்ததாகவும் தெரியவந்தது. இதன் காரணமாக தான் பாத்திமா லதீப் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்