30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக்கடை பணியாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்

30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. மேலும் அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

Update: 2019-11-12 23:00 GMT
நாகப்பட்டினம்,

டி.என்.சி.எஸ்.சி.க்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும். ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். பொட்டல முறை, ஓய்வூதியம் ஆகியவற்றை அமல்படுத்த வேண்டும். நியாயவிலைக்கடை பணியாளர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட நியாயவிலைக்கடை பணியாளர்கள் நாகை தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணை தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் பழனிவேல், தியாகராஜன், ஆடியபாதம், மோகன்தாஸ், தங்கராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சுரேஷ்கண்ணா வரவேற்றார். அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் சிவக்குமார், நிர்வாக குழு உறுப்பினர் பாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இதில் திரளான நியாய விலைக்கடை பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டகிளை தலைவர் ரமணராம் நன்றி கூறினார்.

கோஷங்கள்

டி.என்.சி.எஸ்.சி.க்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். பொட்டல முறை, ஓய்வூதியம் ஆகியவற்றை அமல்படுத்த வேண்டும். நியாயவிலைக்கடை பணியாளர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும். கோரிக்கைகள் குறித்து அரசு, நிர்வாகிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் நாகை மாவட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட நியாயவிலைக்கடைகள் மூடப்பட்டிருந்தன.. இதன் காரணமாக பொதுமக்கள் பொருட்கள் வாங்க முடியாமல் அவதியடைந்தனர்.

மேலும் செய்திகள்