கோத்தகிரி பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு - எச்சரிக்கையுடன் இருக்க பொதுமக்களுக்கு வனத்துறை வேண்டுகோள்

கோத்தகிரி பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகஅளவில் உள்ளது. அதனால் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Update: 2019-11-12 22:30 GMT
கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் மலைப்பாங்கான பகுதியாக உள்ளதால் அங்குள்ள வனப்பகுதிகளில் புலி, கரடி, காட்டெருமை, கடமான், மான், காட்டுப்பன்றிகள், சிறுத்தை, காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி இருப்பதால் வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் விவசாய விளைநிலங்களுக்குள் புகுவது வாடிக்கையாகி வருகிறது.

இந்தநிலையில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மலை பெய்து வருவதால் இங்குள்ள தேயிலை தோட்டங்கள், காய்கறி தோட்டங்கள் மற்றும் வனப்பகுதிகள் ஆகியவை பசுமைக்கு திரும்பி உள்ளதுடன், நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.

தற்போது வனத்துறைக்கு சொந்தமான லாங் வுட் சோலை பகுதியை ஒட்டியுள்ள மிளிதேன் கிராமத்திற்கு செல்லும் சாலையோரத்தில் அமைந்துள்ள தேயிலை தோட்டத்தில் அதிகஅளவில் புற்கள் வளர்ந்து உள்ளன. இதில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வரையாடுகள், புள்ளிமான்கள் கூட்டம் கூட்டதாக வந்து அந்த புற்களில் மேய்கின்றன. இவ்வாறு அங்கு சுற்றித்திரியும் புள்ளிமான்கள் மற்றும் வரையாடுகளை அந்த வழியாக வாகனங்களில் செல்லும் சுற்றுலாப்பயணிகள் ஆச்சரியத்துடன் கண்டு களித்து செல்கிறார்கள்.

இதேபோல கோடநாடு அருகே உள்ள ஈளாடா, கதவுதொரை கிராம பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் குட்டிப்புலி ஒன்று சுற்றித்திரிந்தது. புலியை கண்டு தேயிலை பறிக்கும் பணியில் இருந்த தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதில் ஒருசிலர் அந்த குட்டிப்புலியை தங்களது செல்போனில் படம் பிடித்தனர்.

மேலும் புலிக்குட்டி தேயிலை தோட்டத்தில் நடமாடி வருவதால் தாய்ப்புலியும் அப்பகுதியில் இருக்கும் என்பதால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே புலியின் நடமாட்டத்தை கண்காணித்து அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், கோத்தகிரி பகுதியில் செடி-கொடிகள் மற்றும் புற்கள் அதிகஅளவில் வளர்ந்து பசுமையாக காட்சி அளிக்கிறது. அதனால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக புலிகள், சிறுத்தை, மான், வரையாடுகள் அடிக்கடி உலா வருகின்றன.

குறிப்பாக கதவுதொரை பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் குட்டிப்புலி அடிக்கடி நடமாடுகிறது. அதனால் அந்த குட்டியின் தாய் புலியும் அதன் அருகே சுற்றித்திரியும். அதனால் தொழிலாளர்கள் கவனமுடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். மேலும் வனப்பகுதியை யொட்டி உள்ள கிராமப்பகுதியில் சுற்றித்திரியும் வனவிலங்குகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்