உயர்கல்வியில் பெண்கள் சிறந்து விளங்குவதால் இந்தியா வளர்ச்சி பாதையில் செல்கிறது

உயர்கல்வியில் பெண்கள் சிறந்து விளங்குவதால் இந்தியா வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது என வி.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கூறினார்.

Update: 2019-11-12 22:30 GMT
சென்னை,

நிகர்நிலை பல்கலைக்கழகமான சென்னை வி.ஐ.டி.யின் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக மத்திய பெண்கள்-குழந்தைகள் மற்றும் ஜவுளித்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி கலந்துகொண்டார். கவுரவ விருந்தினராக இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் பத்மஜா சந்துரு பங்கேற்றார்.

விழாவில் 1,703 மாணவ- மாணவிகள் பட்டம் பெற்றனர். தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த 179 பேர் பதக்கங்களையும், 64 பேர் முனைவர் பட்டங்களையும் பெற்றனர்.

ஸ்மிரிதி இரானி பேச்சு

பல்கலைக்கழக வளாகத்தில் 2 ஆயிரத்து 500 பேர் அமரக்கூடிய வகையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த காந்தி உள்விளையாட்டு அரங்கத்தையும் ஸ்மிரிதி இரானி திறந்து வைத்தார்.

விழாவில் அவர் பேசியதாவது:-

இந்தியாவில் பெண்கள் அதிகளவில் உயர் கல்வியை தொடர்கிறார்கள். அதில் சிறப்பான இடத்தையும் பெறுகிறார்கள். இதனால் நமது நாடு சரியான வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

நாம் கடந்த 10 ஆண்டுகளில் ஆராய்ச்சி துறையில் முன்னணியில் இருக்கிறோம். 2006-ம் ஆண்டு 331 பெண்கள் ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்திருந்தனர்.

மாணவர்களுக்கு அறிவுரை

கடந்த 10 ஆண்டுகளில் அதாவது 2016-ம் ஆண்டு 3 ஆயிரத்து 301 பெண்கள் ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்து இருக்கின்றனர். சில துறைகளில் ஆண்களை விட பெண்கள் முன்னிலை பெற்றுள்ளனர். எனினும் பெண்களுக்கு இன்னும் அதிகாரம் அளிக்கவும், அவர்கள் சமத்துவ நிலையை அடையவும் அதிகளவில் உழைக்க வேண்டி உள்ளது.

இந்தியாவில் சுகாதாரம், விவசாயம், கல்வி உள்ளிட்ட துறைகள் 2 ஆண்டுகளில் பெருமளவில் வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளது. காந்தியை மனதில் கொண்டு இந்தியாவின் கிராமப்புற வளர்ச்சிக்கு மாணவர்கள் உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

உள்விளையாட்டு அரங்கம் திறப்பு

வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் பேசுகையில், ‘தரமான கல்வியால் மட்டுமே இந்தியாவின் பொருளாதாரத்தை அமெரிக்க டாலருக்கு நிகராக உயர்த்த முடியும். உலகில் உயர்கல்வி படிப்பதற்கு நம் நாடு தான் சிறந்த இடமாக இருக்க வேண்டும்.

உயர் கல்வி படிப்பதற்கு நமது நாட்டை சேர்ந்த மாணவ-மாணவிகள் வெளிநாடுகளுக்கு செல்வதை வி.ஐ.டி. மாற்றி அமைத்துள்ளது. இங்கு 54 நாடுகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்’ என்றார்.

விழாவில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆனந்த் ஆ.சாமுவேல் வரவேற்று பேசினார். துணை தலைவர் ஜி.வி.செல்வம், இணை துணைவேந்தர்கள் எஸ்.நாராயணன்(வி.ஐ.டி. வேலூர்), வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன்(சென்னை), பல்கலைக்கழக மானியக்குழு முன்னாள் துணை தலைவர் எச்.தேவராஜ் மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்