வீட்டுமனைபட்டா வழங்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

வீட்டுமனைபட்டா வழங்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

Update: 2019-11-12 23:00 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள முக்கரம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சந்திராபுரம் கிராமத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள் முக்கரம்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோதண்டன், முன்னாள் கவுன்சிலர் சிவா தலைமையில் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினார்கள்.

அப்போது அவர்கள் கூறியதாவது,.

நாங்கள் கும்மிடிப்பூண்டி வட்டம் முக்கரம்பாக்கம் ஊராட்சி சந்திராபுரம் கிராமத்தில் வசித்து வருகிறோம். கடந்த 1972-ம் ஆண்டு எங்களுக்கு வீட்டுமனைபட்டா வழங்கப்பட்டது. அந்த பட்டாவானது கிராமக்கணக்கில் வரையறுக்கப்படாமல் புறம்போக்கு நிலத்திற்கான பட்டாவாகவே உள்ளது.

புகார் மனு

கடந்த 5 ஆண்டுகளாக பலமுறை வருவாய் கோட்ட அலுவலர், தாசில்தார், வருவாய்த்துறை அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் என பலரிடம் மனு அளித்தும் எங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. இதனால் நாங்கள் அனைவரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். எனவே எங்களுக்கு விரைவில் கிராம கணக்கில் வரையறுக்கப்பட்ட வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் முறையிட வந்தோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அளித்தனர்.

அதை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்