அமேதியில் போட்டியிட ராகுல்காந்திக்கு பயம்: பிரதமர் மோடி கிண்டல்

அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக பிரதமர் மோடி கிண்டல் செய்துள்ளார்.

Update: 2024-05-03 07:56 GMT

கொல்கத்தா,

நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல்காந்தி போட்டியிட உள்ளார். வயநாடு தொகுதியில் ஏற்கனவே களமிறங்கியுள்ள ராகுல்காந்தி 2வதாக ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

இவர் அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் கிஷோர் லால் சர்மா களமிறங்கியுள்ளார். அமேதி தொகுதியில் பா.ஜ.க. வேப்டாளராக மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி மீண்டும் களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில், அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக பிரதமர் மோடி கிண்டல் செய்துள்ளார்.

மேற்குவங்காள மாநிலம் பர்த்தமான் மாவட்டம் துர்காபூரில் நடத்த பா.ஜ.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது,

துர்காபூர் தொழில்நகரமாக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் அறியப்பட வேண்டும். மேற்குவங்காளத்தில் இந்து மத மக்களை திரிணாமுல் காங்கிரஸ் 2ம் தர குடிமக்களாக நடத்துகிறது. அரசியலமைப்பை மாற்ற காங்கிரஸ் நினைக்கிறது. தலித், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் இடஒதுக்கீட்டை அபகரித்து ஜிகாதி வாக்கு வங்கிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் நினைக்கிறது.

மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கமாட்டோம் என எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்க நான் காங்கிரசிடம் சவால் விட்டேன். ஆனால், அவர்கள் அமைதியாக உள்ளனர்.

அமேதியில் போட்டியிட காங்கிரசின் இளவரசர் ராகுல்காந்திக்கு பயம். அதனால்தான் அவர் ரேபரேலியில் போட்டியிடுகிறார்.

திரிணாமுல் காங்கிரசின் பள்ளி வேலைவாய்ப்பு ஊழலால் வேலையை இழந்த ஆசிரியர்/ஆசிரியைகளுக்கு சட்ட ஆலோசனை வழங்க மேற்குவங்காள பா.ஜ.க. தலைமையை அறிவுறுத்தியுள்ளேன்.

மனிதாபிமானத்தைவிட சமரசம் மிகவும் முக்கியம் என்பதால் சந்தேஷ்காலி சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஷேக் ஷாஜகானை திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான மேற்குவங்காள அரசு பாதுகாக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்