கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்டு இறுதிச்சடங்கில் பங்கேற்க மனைவி, சகோதரிக்கு 3 நாள் பரோல் - ஐகோர்ட்டு உத்தரவு

கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்டு இறுதிச்சடங்கில் பங்கேற்க அவருடைய மனைவி, சகோதரிக்கு 3 நாள் பரோல் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2019-11-14 22:30 GMT
மதுரை,

கேரள மாநிலம் அகழிக்காடு பகுதியில் மாவோயிஸ்டுகள் சிலர்் என்கவுன்ட்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் சேலத்தை சேர்ந்த மணிவாசகம் என்பவரும் ஒருவர் ஆவார். அவரை அடையாளம் காண, கேரள போலீசார் அனுமதிக்க வேண்டும் என்று அன்பரசன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ‘மணிவாசகத்தின் உடலை அடையாளம் காண, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரின் மனைவி கலா, சகோதரி சந்திரா ஆகியோருக்கு பரோல் அளிக்க வேண்டும்’ என்றும் கூறியிருந்தார்.

நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணையின்போது, “மணிவாசகத்தின் உடலை, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும். தேவையற்ற ஆதாரங்களை கேட்டு தாமதப்படுத்தக்கூடாது” என ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மணிவாசகத்தின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டதாக மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மணிவாசகத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்க அவருடைய மனைவி கலா, சகோதரி சந்திரா ஆகியோருக்கு வருகிற 17-ந்தேதி வரை 3 நாள் பரோல் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்