சத்தி் அருகே, பஸ்போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் மண்பாதையை தார்சாலையாக மாற்றக்கோரி கிராமமக்கள் சாலை மறியல்

சத்தி அருகே போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், மண்பாதையை தார் சாலையாக மாற்றக்கோரி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-11-15 22:30 GMT
சத்தியமங்கலம், 

சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் வனப்பகுதியில் சுஜில்குட்டை, கள்ளம்பாளையம், புதுக்காடு, தெங்குமரஹடா உள்ளிட்ட வனப்பகுதி கிராமங்கள் உள்ளன. இதில் தெங்குமரஹடாவில் 500 குடும்பத்தினரும், கள்ளம்பாளையத்தில் 200 குடும்பத்தினரும், புதுக்காடு பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரும் வசிக்கிறார்கள்.

சுஜில்குட்டையில் இருந்து கள்ளம்பாளையம் வரை தார் ரோடு கிடையாது. வனத்துறைக்கு சொந்தமான மண்பாதையாகும். இந்த பாதையை சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் கடந்துதான் தெங்குமரஹடா செல்லவேண்டும்.

இந்தநிலையில் பல ஆண்டுகளாகவே சுஜில்குட்டை-கள்ளம்பாளையம் மண்பாதை குண்டும்-குழியுமாக உள்ளது. வனத்துறை அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்தும் இந்த பாதை சரிசெய்யப்படவில்லை.

இதற்கிடையே கடந்த சில நாட்களாக அப்பகுதியில் மழை பெய்கிறது. இதனால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அரசு பஸ்போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு கிராமமக்கள் அவதிப்பட்டார்கள்.

இதைத்தொடர்ந்து நேற்று பகல் 12 மணி அளவில் சுஜில்குட்டை, கள்ளம்பாளையம், புதுக்காடு, தெங்குமரஹடா கிராமங்களை சேர்ந்த 500 பெண்கள் உள்பட 700-க்கும் மேற்பட்ட மக்கள் சத்தியமங்கலத்தில் உள்ள பவானிசாகர் வனத்துறை அலுவலகத்துக்கு திரண்டு வந்தார்கள். பின்னர் அலுவலகம் முன்பு செல்லும் மெயின் ரோட்டில் திடீர் சாலை மறியிலில் ஈடுபட்டார்கள். இதனால் அந்த வழியாக எந்த வாகனமும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல் பற்றி தகவல் அறிந்ததும், சத்தி போலீசார், ஈரோடு ஆயுதப்படை மற்றும் சிறப்பு காவல் பிரிவு போலீசார் விரைந்து வந்தார்கள். அதன்பின்னர் மாவட்ட வன அதிகாரி அருண்லால் சாலை மறியலில் ஈடுபட்டு இருந்தவர்களில் முக்கியமானவர்களை அலுவலகத்துக்கு அழைத்து சென்று பேச்சுவர்த்தை நடத்தினார். அவரிடம் கிராமமக்கள். '20 வருடமாக மண்பாதை சீரமைக்கப்படவில்லை. அதனால் ஊருக்குள் அரசு பஸ்கள் வருவதில்லை, மேலும் சுஜில்குட்டை-கள்ளம்பாளையம் வனப்பகுதி மண்பாதையை தார்சாலையாக மாற்றவேண்டும். தெங்குமரஹடா மக்கள் பாதுகாப்பாக சென்றுவர மாயாற்றின் குறுக்கே பாலம் கட்டவேண்டும்' என்றார்கள்.

கிராமக்களின் புகாரை கேட்ட மாவட்ட வனத்துறை அதிகாரி அருண்லால், 'மாயாற்றில் பாலம் கட்ட திட்ட மதிப்பீடு செய்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும். சுஜில்குட்டை, கள்ளம்பாளையம் மண்பாதையை தார்ரோடாக மாற்றவேண்டுமானால் மத்திய அரசின் வனத்துறை தலைமை அதிகாரிகளிடம் இருந்து அனுமதி பெறவேண்டும். அதுவரை பஸ் சென்றுவரும் வகையில் உடனே மண்பாதையை சீரமைத்து தருகிறோம்' என்றார். அதை கிராமமக்கள் ஏற்றுக்கொண்டதால் சாலைமறியல் கைவிடப்பட்டது.

மேலும் செய்திகள்