நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: வைகை, மூலவைகை ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் வைகை, மூலவைகை ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.;

Update:2019-11-17 03:30 IST
ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம் வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரசரடி, மேகமலை, வருசநாடு ஆகிய வனப்பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த கனமழையால் நேற்று காலையில் வைகை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. யாரும் எதிர்பார்க்காத நிலையில் திடீரென வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

எனவே இந்த திடீர் வெள்ளப்பெருக்கை வருசநாடு முதல் வைகை அணை வரையிலான ஆற்றங்கரையோர கிராம மக்கள் கூடிநின்று ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர். இது கடந்த 2 மாதத்தில் வைகை ஆற்றில் ஏற்பட்ட 4-வது வெள்ளப்பெருக்கு ஆகும். இதுவரை ஏற்பட்ட 3 வெள்ளப்பெருக்கை விட தற்போது கூடுதலாக தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

நேற்று காலை 6 மணிக்கு வினாடிக்கு 2,017 கனஅடியாக இருந்த நீர்வரத்து, காலை 8 மணிக்கு 3,900 கனஅடியாகவும், 9 மணிக்கு 6,500 கனஅடியாகவும், காலை 11 மணிக்கு 10,100 கனஅடியாகவும் உயர்ந்தது.

இதனால் வைகை அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அதிகமான நீர்வரத்து காரணமாக காலை 6 மணிக்கு 58.83 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று மாலை 4 மணிக்கு 59.78 அடியாக உயர்ந்தது.

இந்தநிலையில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

வைகை ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் மூலவைகை ஆற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்றும், இதை ஊராட்சி நிர்வாகத்தினர் கண்காணிக்க வேண்டும் என்றும் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேனி அருகே உள்ள பள்ளப்பட்டி உள்ளிட்ட சில ஊர்களில் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர். இதற்கிடையே வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் வேகம், தண்ணீரின் அளவு ஆகியவற்றை நவீனகருவியின் மூலம் கண்டறியும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டனர்.

இதே போன்று கடமலை-மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. அதன்காரணமாக 10 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மூலவைகை ஆற்றங்கரை ஓரமாக அமைந்துள்ள தோட்டங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இருப்பினும் பயிர்களுக்கு அதிக அளவில் சேதம் ஏற்படவில்லை. இந்த வெள்ளப்பெருக்கை கரையோர கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்வையிட்டனர். கனமழையின் காரணமாக நேற்று அதிகாலை அரசரடி மலைக்கிராமம் அருகே தேனி சாலையில் மரம் சாய்ந்து விழுந்தது. இதனால் மலைக்கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிப்படைந்தது.

இதுபோல கனமழை காரணமாக பாலூத்து, சிறப்பாறை ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சிறப்பாறை ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நேற்று காலை 1 மணி நேரத்திற்கும் மேலாக முத்தாலம்பாறை சாலையில் போக்குவரத்து தடை ஏற்பட்டது. எனவே வாகனங்கள் மாற்று சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. வெள்ளிமலை வனப்பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. எனவே மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும் நிலை உள்ளது. இதைத்தொடர்ந்து கரையோரம் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் புகாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு பிறகு மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்