பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே பாதையில் மணலை கொட்டியதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையில் மெட்ரோ ரெயில் நிர்வாகம் மணல் கொட்டியதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

Update: 2019-11-16 22:45 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஆலந்தூர் பகுதியில் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் இருந்து பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு செல்வதற்காக வாகனங்கள் மட்டும் செல்லும் வகையில் பாதை உள்ளது. ஆலந்தூர் சுற்று வட்டார பகுதிக்கு செல்வதற்காக இதை பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

அந்த வழி பாதை மெட்ரோ ரெயில்வே தூண்களுக்கு இடையே செல்கிறது. அந்த நிலத்தை கையகப்படுத்தும் நோக்கில் மெட்ரோ ரெயில் நிர்வாகம் கடந்த ஆண்டு அந்த பாதையை மூட முயற்சி செய்தது. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இந்தநிலையில் மெட்ரோ ரெயில்வே நிர்வாகம் அந்த வழி பாதை முழுவதும் மணல் கொட்டி யாரும் செல்ல முடியாத வகையில் அடைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஆலந்தூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. தா.மோ. அன்பரசன், வியாபாரிகள், வக்கீல்கள், தி.மு.க., ம.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அந்த பாதையை அடைத்து போடப்பட்ட மணல் குவியல்களை உடனே அகற்ற வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள்.

இது பற்றி தகவல் அறிந்ததும் ஆலந்தூர் மண்டல உதவி கமிஷனர் முருகன், பரங்கிமலை போலீஸ் உதவி கமிஷனர் சங்கர நாராயணன், மாநகராட்சி அதிகாரிகள் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

“பொதுமக்கள் செல்ல கூடிய வகையில் மீண்டும் பாதையை ஏற்படுத்த வேண்டும். இல்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவேன்” என்று தி.மு.க. எம்.எல்.ஏ. தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.

இது தொடர்பாக மெட்ரோ ரெயில்வே நிர்வாகத்திடம் பேசி மணல் குவியல்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்