நரசிங்கநல்லூர் பகுதியில், சீரான குடிநீர் வழங்க வேண்டும் - கலெக்டரிடம், கிராம மக்கள் மனு

நரசிங்கநல்லூர் பகுதியில் சீரான குடிநீர் வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ‌ஷில்பாவிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2019-11-18 22:45 GMT
நெல்லை, 

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சிமன்ற கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ‌ஷில்பா தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

மானூரை அடுத்த பல்லிக்கோட்டை கிராமமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், பல்லிக்கோட்டை கிராமத்தில் 103 ஆண்டுகளாக தபால் அலுவலகம் இயங்கி வருகிறது. அதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற்று வருகிறார்கள்.

தற்போது அந்த தபால் அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற முயற்சி செய்கிறார்கள். அதே ஊரிலேயே தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

நெல்லை மாவட்ட சாலை போக்குவரத்து தொழிற்சங்க தலைவர் பிச்சை தலைமையில் கார் டிரைவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், “களக்காட்டில் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் வாடகை கார் ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறோம். சிலர் சொந்த பயன்பாட்டுக்காக வாங்கிய காரை வாடகைக்கு விடுகிறார்கள். இதனால் எங்கள் தொழில் பாதிக்கப்படுகிறது. மோட்டார் வாகன சட்டத்தின் படி விதிமுறையை மீறி வாடகைக்கு கார் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

நெல்லையை அடுத்த நரசிங்கநல்லூரை சேர்ந்த கிராமமக்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள், கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “எங்கள் ஊரில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது.

இதுகுறித்து பஞ்சாயத்து அலுவலர்களிடம் மனு கொடுத்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் ஊருக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் மின்சாரம், சாலை வசதியையும் ஏற்படுத்தி தர வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. அதில், “தமிழக அரசு உத்தரவுப்படி அனைத்து ஓட்டல்களிலும் குறைந்த கட்டணத்தில் ஜனதா சாப்பாடு என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. அந்த திட்டம் நாளடைவில் செயல்படவில்லை. தற்போது சாதாரண ஓட்டல்களில் கூட ரூ.110-க்கு மதிய உணவு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே குறைந்த கட்டணத்தில் மதிய உணவு வழங்க அரசு முன்வர வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

தமிழர் விடுதலை கொற்றம் கட்சி தலைவர் வியனரசு, கலெக்டரிடம் மனு கொடுத்தார். அந்த மனுவில், “நெற்கட்டும்செவலில் பூலித்தேவர் மணிமண்டபத்தில் உள்ள கல்வெட்டில் வெண்ணிக்காலாடியார் தொடர்பான பிழையை திருத்த வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது.

ரா‌‌ஷ்டிய இந்து மகா சார்பில் கலெக்டரிடம் கொடுக்கப்பட்ட மனுவில், “படைப்புழு தாக்கிய மக்காச்சோளத்துக்கு அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியத்தை வழங்க ஒரு அரசு அதிகாரி லஞ்சம் கேட்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

நெல்லையை அடுத்த பழையபேட்டை காந்திநகரை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், பழையபேட்டை பகுதியில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. அந்த பள்ளிக்கூடத்தில் 270 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளி 1947-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்த பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மக்கள் தேசம் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் சுகுமார் தலைமையில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், கல்லிடைக்குறிச்சி ரெயில் நிலையம் பஸ்நிறுத்தத்தின் அருகே உள்ள மெயின்ரோட்டில் மதுபான கடை அமைக்க அரசு சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அருகே அரசு மருத்துவமனை, அரசு அலுவலகங்கள், தபால் நிலையம், பத்திர பதிவுத்துறை, மின்வாரிய அலுவலகம் உள்ளது. மெயின் ரோட்டில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் பள்ளிக்கூடம் உள்ளது. எனவே அந்த பகுதியில் மதுபான கடை அமைக்க அனுமதி வழங்கக்கூடாது“ என்று கூறப்பட்டு இருந்தது.

இதேபோல் பல்வேறு ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் வரிசையில் நின்று கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

மேலும் செய்திகள்