செல்போன் கைப்பற்றப்பட்ட வழக்கில், முருகன் மீண்டும் கோர்ட்டில் ஆஜர் - விரைவில் பரோல் கிடைக்கும் என்றார்

செல்போன் கைப்பற்றப்பட்ட வழக்கில் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன் நேற்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது விரைவில் பரோல் கிடைக்கும் என்றார்.

Update: 2019-11-18 22:00 GMT
வேலூர், 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்தியசிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இவருடைய அறையில் இருந்து கடந்த மாதம் செல்போன் மற்றும் சிம்கார்டுகள் ைகப்பற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் தனி அறைக்கு மாற்றப்பட்டார். சிறையில் வழங்கப்படும் சலுகைகளும் ரத்து செய்யப்பட்டது.

இதனை கண்டித்து முருகன் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவருக்கு ஆதரவாக பெண்கள் சிறையில் அவருடைய மனைவி நளினியும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். அதிகாரிகள் ேபச்சுவார்த்தைக்கு பிறகு இருவரும் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

செல்போன் கைப்பற்றப்பட்ட வழக்கில் முருகன்மீது பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணை வேலூர் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 13-ந் தேதி முருகனிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது தேதி குறிப்பிடாமல் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. இதனால் முருகன் போலீஸ் காவலுடன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டு மாஜிஸ்திரேட்டு நிஷா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு விசாரணையை வருகிற 2-ந் தேதிக்கு மாஜிஸ்திரேட்டு நிஷா ஒத்திவைத்தார்.

கடந்த 31-ந் தேதி கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வெளிேய வந்த முருகன், தனது பரோல் மற்றும் விடுதலையை தடுக்க திட்டமிட்டு சதி நடப்பதாகவும், சிறையில் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும் கூறினார்.

இதுகுறித்து நேற்று அவரிடம் சிறையில் உங்களுக்கு எந்த மாதிரியான அச்சுறுத்தல் இருக்கிறது என்று கேட்டதற்கு சிரித்தபடியே கைகூப்பி வணங்கிவிட்டு பதில் சொல்ல மறுத்துவிட்டார். பரோல் குறித்து கேட்டதற்கு வழக்கறிஞர் மூலம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், விரைவில் பரோல் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்