முதல்- அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின்கீழ் 10 ஆயிரத்து 683 பேருக்கு ரூ.23 கோடி நலத்திட்ட உதவிகள்

முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின்கீழ் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 10 ஆயிரத்து 683 பேருக்கு ரூ.23 கோடி நலத்திட்ட உதவிகளை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் வழங்கினார்.

Update: 2019-11-19 23:00 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின்கீழ் மனுக்கள் கொடுத்தவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நாகர்கோவிலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது.

விழாவுக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி வரவேற்று பேசினார். கூடுதல் கலெக்டரும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருமான மெர்சி ரம்யா திட்ட விளக்க உரையாற்றினார்.

10 ஆயிரத்து 683 பேருக்கு...

சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தில் மனுக்கள் கொடுத்த 10 ஆயிரத்து 683 பேருக்கு ரூ.23 கோடியே 15 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். முன்னதாக மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன் வாழ்த்தி பேசினார். முடிவில் சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் (பொறுப்பு) சிவகுமார் நன்றி கூறினார்.

விழாவில் தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணைய தலைவர் சேவியர் மனோகரன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் ராஜன், மகளிர் திட்ட அலுவலர் பிச்சை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகன்யா, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் பால்துரை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மாவட்ட மேலாளர் மணிகண்டன், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அப்துல்லா மன்னான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் நடமாடும் அவசர கால்நடை சிகிச்சை ஊர்தி சேவையை கலெக்டர் பிரசாந்த் வடநேரே முன்னிலையில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்