கோவில்பட்டியில் வேளாண்மை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் - உரம் தட்டுப்பாடின்றி வழங்க கோரிக்கை

உரம் தட்டுப்பாடின்றி வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் வேளாண்மை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்

Update: 2019-11-19 22:45 GMT
கோவில்பட்டி,

கோவில்பட்டி யூனியன் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை அலுவலகம் மற்றும் கிடங்கை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நல்லையா தலைமையில், விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் அவர்கள், உதவி வேளாண்மை அலுவலரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

அந்த மனுவில், படைப்புழு தாக்கிய மக்காச்சோள பயிருக்கு தெளிக்கும் வகையில், அரசு வழங்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளை அரசு நிர்ணயம் செய்த அளவுக்கு குறையாமல் அந்தந்த கிராமங்களுக்கு சென்று விவசாயிகளுக்கு நேரடியாக வழங்க வேண்டும்.

கிராம கூட்டுறவு சங்கங்களில் யூரியா உரம் தட்டுப்பாடின்றி, அரசு நிர்ணயித்த விலையில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

உரக்கடைகளிலும் அரசு நிர்ணயித்த விலையில் யூரியாவை வழங்க வேண்டும். உழவு மானியம், விதை மானியம், உர மானியம் போன்றவற்றை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் கிரு‌‌ஷ்ணமூர்த்தி, மாநில குழு உறுப்பினர் பாலமுருகன், நிர்வாகிகள் ரவீந்திரன், குருசாமி, சீனிவாசன், ஆனந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்