குடோனில் இரும்பு கம்பிகள் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி 2 மணி நேர போராட்டத்திற்கு பின் உடல் மீட்பு

திண்டிவனத்தில் உள்ள இரும்பு கடை குடோனில் ‘ரேக்’கில் இருந்து சரிந்து விழுந்த இரும்பு கம்பிகளுக்கு அடியில் சிக்கி தொழிலாளி பலியானார். 2 மணி நேர போராட்டத்திற்கு பின் அவரது உடல் மீட்கப்பட்டது.

Update: 2019-11-19 23:00 GMT
திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் பக்ருதீன் என்பவரது மகன் அப்துல்ரஹீம்(வயது 22). இவர் திண்டிவனத்தில் உள்ள விழுப்புரம் சாலையில் கட்டுமானத்திற்கு தேவையான இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவரது கடையில் அகூர் கிராமத்தை சேர்ந்த ராமு(48) என்பவர் வேலை செய்து வந்தார்.

வழக்கம் போல் நேற்று காலையில் இரும்புக்கடைக்கு வந்த ராமு, குடோனுக்குள் சென்று வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது குடோனில் உள்ள ‘ரேக்’குகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகள் திடீரென சரிந்து விழுந்தது. இதில் இரும்பு கம்பிகள் ராமு மீது விழுந்து அமுக்கியதில் அவர் இரும்புக்கம்பிகளுக்கு அடியில் சிக்கிக் கொண்டார். அவரை சக தொழிலாளர்கள் மீட்க முயன்றும் முடியவில்லை.

2 மணி நேரம் போராட்டம்

இதனால் திண்டிவனம் போலீஸ் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தானகுமார் தலைமையில் தீயணைப்பு வீரர்களும், திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி தலைமையில் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் பொக்லைன் எந்திரம் உதவியுடன் கடையின் பின்புறம் உள்ள சுவற்றில் துளையிட்டு, சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி ராமுவை பிணமாக மீட்டனர். இதைத் தொடர்ந்து ராமுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

வழக்குப்பதிவு

இந்த சம்பவம் குறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரும்பு கம்பிகள் சரிந்து விழுந்ததில் பலியான ராமுவுக்கு திலகம்(42) என்ற மனைவியும், தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் கலைவாணி(24) என்ற மகளும், திருவண்ணாமலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் தணிகை நாதன்(19) என்ற மகனும் உள்ளனர்.

மேலும் செய்திகள்