மேயர், நகரசபை தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் ஜி.ராமகிரு‌‌ஷ்ணன் பேட்டி

மேயர், நகரசபை தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் என ஜி.ராம கிரு‌‌ஷ்ணன் கூறினார்.

Update: 2019-11-20 23:15 GMT
நாகப்பட்டினம்,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சென்னையில் நடந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தோழமை கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேயர், நகரசபை தலைவர், பேரூராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு எந்த காரணத்தை கொண்டும் மறைமுக தேர்தல் நடத்தக்கூடாது. மறைமுகமாக தேர்ந்தெடுப்பது என்பது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும்.

சொத்து வரி உயர்வை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தியது. ஆனால் தமிழக அரசு ரத்து செய்யவில்லை. தற்போது தேர்தலை காரணம் காட்டி வரியை குறைத்துள்ளனர்.

இதில் இருந்து உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவது உறுதியாகி விட்டது. கோவில் இடங்களில் குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதனால் வீட்டுமனைப்பட்டா வழங்க தமிழக அரசு ஆணை வெளியிட்டது. இதற்கு இடையே இந்து மக்கள் கட்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கு முடியும் வரை இந்த அரசாணையை வெளியிட முடியாது என்று தமிழக அரசு சார்பில் வக்கீல் தெரிவித்துள்ளார். இதை கண்டித்து வருகிற 26-ந் தேதி தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக மத்திய அரசு கடன்களை தள்ளுபடி செய்து விட்டு சாமானிய மக்கள் மீது சுமையை வைக்கிறது. இவ்வாறு செயல்படும் மத்திய அரசை கண்டித்து அடுத்த மாதம் (டிசம்பர்) முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் புதிதாக பொறுப்பேற்றுள்ள இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நாகை மாலி, மாரிமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்