சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியருக்கு 10 ஆண்டு சிறை

திருவலம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவழக்கில் ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியருக்கு வேலூர் மகளிர் கோர்ட்டில் 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2019-11-20 23:00 GMT
வேலூர்,

திருவலத்தை அடுத்த சேர்க்காடு பகுதியை சேர்ந்த தம்பதியின் மகள் 5 வயது சிறுமி. கடந்த 30.7.2017 அன்று கணவன்-மனைவி இருவரும் வெளியில் சென்றுவிட்டனர். இதனால் சிறுமி பக்கத்தில் உள்ள வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாள். அதேப்பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது 62). ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர்.

பக்கத்துவீட்டில் விளையாடிய சிறுமி அங்கிருந்து வெளியே வந்தபோது, மோகன்தாஸ் வந்துள்ளார். அவர் சிறுமிக்கு சாக்லேட் வாங்கித்தருவதாக கூறி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குவைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதை வெளியே சொல்லக்கூடாது என்றும் மிரட்டி உள்ளார்.

பின்னர் அவரே சிறுமியை அவளுடைய வீட்டுக்கு அழைத்து சென்றார். அப்போது சிறுமியின் தந்தை வந்துள்ளார். அவர் மோகன்தாசிடம், ஏன் எனது மகளை நீங்கள் அழைத்து வருகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் சிறுமிக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி உள்ளார். மேலும் சிறுமிக்கு காய்ச்சல் இருந்துள்ளது.

உடனே சிறுமியை, மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். இதுபற்றி சிறுமியிடம் கேட்டபோது நடந்த சம்பவத்தை தெரிவித்திருக்கிறாள். உடனே இதுபற்றி மோகன்தாஸ் மீது திருவலம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதுகுறித்து காட்பாடி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன்தாசை கைதுசெய்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் மகளிர் கோர்ட்டில் நடைபெற்றது. அரசு வழக்கறிஞர் லட்சுமிபிரியா ஆஜரானார். வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி செல்வம் நேற்று தீர்ப்பு கூறினார்.

அதில் மோகன்தாசுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மோகன்தாஸ் வேலூர் மத்தியசிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்