ஆரணியில் 200 பெண்களுக்கு மானியவிலையில் இருசக்கர வாகனம் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்

ஆரணியில் 200 பெண்களுக்கு மானியவிலை இரு சக்கர வாகனங்களை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.

Update: 2019-11-20 23:00 GMT
ஆரணி,

தமிழ்நாடு மாநிலஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண்களுக்கு மானியவிலையில் இருசக்கர வாகனம் வழங்கும் விழா ஆரணியில் நடந்தது. விழாவுக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். ஆரணி உதவி கலெக்டர் மைதிலி, தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிர்திட்ட இயக்குனர் பி.சந்திரா வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு 200 பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனங்களை வழங்கி பேசினார்.

ரூ.220 கோடி வழங்கப்பட்டுள்ளது

அப்போது கடந்த 2 ஆண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 6,396 பயனாளிகளுக்கு மானியமாக ரூ.15 கோடியே 95 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்களுக்கு நிகராக பெண்களும் வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர்.

மகளிர்குழுக்கள் பெற்றகடனை தொடர்ந்து முறையாக திருப்பி செலுத்துவதால் அவர்களுக்கு தொடர்ந்து கடனுதவிகள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. 2018-19-ம் ஆண்டில் நமது மாவட்டத்துக்கு வங்கிக்கடன் இலக்கு ரூ.575 கோடியாக நிர்ணயம் செய்து இதுவரை ரூ.220 கோடி வழங்கப்பட்டுள்ளது. மகளிர் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை எளிதில் சந்தைப்படுத்திட 100 நடமாடும் அங்காடிகள் அமைக்கப்பட்டுள்ளது என்று பேசினார்.

கால்நடை மருந்தக கட்டிடம்

தொடர்ந்து மேற்கு ஆரணி ஒன்றியத்தில் காமக்கூர்பாளையத்திலும், ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் வடக்குமேடு ஊராட்சியிலும் தலா ரூ.31 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 2 கால்நடை மருந்தக புதிய கட்டிங்களையும் கலெக்டர் தலைமையில், அமைச்சர் திறந்துவைத்தார்.

நிகழ்ச்சிகளில் மத்திய கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் வக்கீல் கே.சங்கர், திருவண்ணாமலை மாவட்ட ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, மாவட்ட நுகர்வோர் பண்டகசாலை தலைவர் கஜேந்திரன், நகர கூட்டுறவு வங்கித் தலைவர் அசோக்குமார், வைகை கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பி.ஆர்.ஜி.சேகர், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் எஸ்.ஜோதிலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்