பெருந்துறை அருகே பாலிடெக்னிக் மாணவர்-போலீஸ்காரர் மீது தாக்குதல் வாலிபருக்கு வலைவீச்சு

பெருந்துைற அருகே பாலிடெக்னிக் மாணவர்-போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்பிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-11-20 23:00 GMT
பெருந்துறை,

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஆயிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவருடைய மகன் சக்திவேல்(வயது 18). சீனாபுரத்தில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆட்டோமொபைல் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் மோட்டார்சைக்கிளில் சக்திவேல் கல்லூரிக்கு சென்றார். பின்னர் மாலையில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது மழை பெய்ததால், சீனாபுரம் அடுத்த மலைக்கோவில் பஸ்நிறுத்தம் அருகே மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு, ஒரு மரத்தின் அடியில் ஒதுங்கி நின்றார்.

தாக்குதல்

அப்போது அங்கு ஒரு வாலிபர் மதுபோதையில் வந்தார். பிறகு சக்திவேலிடம் 100 ரூபாய் கேட்டார். பணம் இல்லை என்று சக்திவேல் கூறியதும் அவரை தாக்க தொடங்கினார். மேலும் சக்திவேல் தலையில் போட்டிருந்த ஹெல்மெட்டை கழற்றி அவரின் தலையிலேயே பயங்கரமாக தாக்கினார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் நடந்தபோது, அதே பகுதியை சேர்ந்த விடுமுறையில் இருந்த போலீஸ்காரர் பிரபாகர் என்பவர் ஓடிச்சென்று தாக்குதலில் ஈடுபட்ட வாலிபரை தடுத்தார். ஆனால் பிரபாகரையும் மதுபோதையில் இருந்த வாலிபர் தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.

வலைவீச்சு

இதைத்தொடர்ந்து பிரபாகர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சக்திவேைல மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுபற்றி பெருந்துறை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் சக்திவேலையும், போலீஸ்காரர் பிரபாகரையும் தாக்கியது சீனாபுரம் அருகே உள்ள மம்முட்டி தோப்பு என்ற பகுதியை சேர்ந்த தினேஷ் (25) என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் தினேசை தேடிச்சென்றார்கள். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். அதனால் போலீசார் தினேசை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்