கோவை அருகே துணிகரம் கட்டிட ஒப்பந்ததாரர் வீட்டில் 130 பவுன் நகை, ரூ.15 லட்சம் கொள்ளை

கோவை அருகே கட்டிட ஒப்பந்ததாரர் வீட்டில் 130 பவுன் நகை, ரூ.15 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-11-20 23:00 GMT
துடியலூர்,

கோவையை அடுத்த துடியலூர் அருகே உள்ள லூனாநகர் அப்பாஸ் கார்டன் 2-வது வீதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 59), கட்டிட ஒப்பந்ததாரர். இவருடைய மனைவி சசி (50). இவர்களுக்கு பிரவீன்ராஜ் (26) என்ற மகனும், 24 வயதில் மகளும் உள்ளனர். இந்த நிலையில் கனகராஜ் தனது மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று மதியம் கனகராஜ் தனது மனைவி சசி, மகன் பிரவீன்குமார், மகள் ஆகியோருடன் கோவையில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு காரில் சென்றார். அப்போது வீட்டின் முன்பு தனது வளர்ப்பு நாயை பாதுகாப்புக்காக கட்டி வைத்திருந்தார். கோவிலுக்கு சென்ற கனகராஜ் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலில் இருந்து வீட்டிற்கு இரவு 7 மணிக்கு திரும்பினார்.

அப்போது வீட்டின் முன்பு கட்டிவைத்திருந்த நாய் மயங்கிய நிலையில் கிடந்தது. மேலும் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் கண்காணிப்பு கேமராக்கள் உடைக்கப்பட்டு இருந்தன.

130 பவுன் நகை கொள்ளை

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த கனகராஜ் வீட்டில் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் உள்ள பொருட்கள் வெளியே எறியப்பட்டிருந்தது. மேலும் பீரோவில் மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த 130 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி மற்றும் ரூ.15 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

உடனடியாக இதுகுறித்து துடியலூர் போலீஸ் நிலையத்திற்கு கனகராஜ் தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர்கள் முனுசாமி, பிராங்ளின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகி இருந்த கைரேகை மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இந்த கொள்ளை சம்பவம் குறித்த புகாரின் பேரில், துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா உடைக்கப்பட்டு உள்ளதால், அந்த பகுதியில் உள்ள வீடு, வணிக வளாகங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக யாரும் வலம் வந்தார்களா என்பது குறித்து அந்த பகுதியில் வசித்து வருபவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி, இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். நீண்ட நாட்களாக நோட்டமிட்டு வந்த மர்ம நபர்கள், வீட்டில் இருந்து ஆட்கள் வெளியே சென்றதும் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கோவை அருகே கட்டிட ஒப்பந்ததாரர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் அச்சம்

இதேபோல கடந்த 2 நாட்களுக்கு முன்பு சின்னதடாகத்தில் கோவில் அர்ச்சகர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். அதனைத்தொடர்ந்து தற்போது கட்டிட ஒப்பந்ததாரர் வீட்டில் 130 பவுன் நகை, ரூ.15 லட்சம் பணம் கொள்ளை போனது.

துடியலூர் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்