வாலிபர் கொலை வழக்கில் ஓய்வுபெற்ற உதவி போலீஸ் கமிஷனர், கள்ளக்காதலிக்கு ஆயுள் தண்டனை செசன்சு கோர்ட்டு தீர்ப்பு

கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட வாலிபரை கொலை செய்த ஓய்வுபெற்ற உதவி போலீஸ் கமிஷனர், கள்ளக்காதலிக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை செசன்சு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2019-11-20 23:02 GMT
மும்பை,

மும்பை பாண்டுப்பை சேர்ந்தவர் சிவாஜி நர்வானே(வயது62). மும்பை காவல் துறையில் உதவி போலீஸ் கமிஷனராக பதவி வகித்து ஓய்வுபெற்றவர். இவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

சிவாஜி நர்வானே உதவி போலீஸ் கமிஷனராக இருந்தபோது, அவருக்கு திலக்நகரை சேர்ந்த நந்தா(50) என்ற விதவை பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. நந்தாவிற்கு ரோகன்(26) என்ற மகன் இருந்தார். மேலும் ரஷ்பா, நேகா ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

இந்தநிலையில் உதவி போலீஸ் கமிஷனர் சிவாஜி நர்வானேவிற்கும், நந்தாவிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் அடிக்கடி தனிமையில் சந்தித்து இருவரும் உல்லாசமாக இருந்து வந்தனர்.

இவர்களின் கள்ளத்தொடர்பு பற்றி அறிந்த நந்தாவின் மகன் ரோகன் தாய் மீது கடும் ஆத்திரம் அடைந்தார். இதனால் தாயுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்தார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நந்தா மகனை தீர்த்துக்கட்ட முடிவு செய்து உதவி போலீஸ் கமிஷனர் சிவாஜி நர்வானேயின் உதவியை நாடினார்.

கள்ளத்தொடர்பு

இதைத்தொடர்ந்து சிவாஜி நர்வானே கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ந்தேதி ரோகனை தனது வீட்டிற்கு நைசாக பேசி அழைத்து உள்ளார்.

இதனால் ரோகன் தனது நண்பர் ஒருவருடன் அவரது வீட்டுக்குச்சென்றார். இந்தநிலையில் ரோகனின் நண்பர் கிளம்பிச்சென்ற பின்னர் கள்ளத்தொடர்பு பற்றி அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த சிவாஜி நர்வானே தான் வைத்திருந்த கத்தியால் ரோகனை சரமாரியாக குத்தி கொலை செய்தார். பின்னர் உடலை அங்குள்ள மறைவான இடத்தில் வீசிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

ஆயுள் தண்டனை

இந்தநிலையில் மறுநாள் காலை ரோகனின் உடலை கண்ட பொதுமக்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி உதவி போலீஸ் கமிஷனர் சிவாஜி நர்வானே மற்றும் அவரது கள்ளக்காதலி நந்தா ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை மும்பை செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் 45 பேர் சாட்சியம் அளித்தனர். இந்தநிலையில் வழக்கின் விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில் நீதிபதி யு.எம். பட்வட் குற்றவாளிகள் 2 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்