காளையிடம் சிக்கி படுகாயம்: விவசாயியை காப்பாற்றிய மகனின் பாசப் போராட்டம் - வேடந்தூர் அருகே பரபரப்பு

வேடசந்தூர் அருகே காளையிடம் சிக்கி உயிருக்கு போராடிய விவசாயியை மீட்ட மகனின் பாசப் போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2019-11-21 23:15 GMT
வேடசந்தூர்,

வேடசந்தூர் அருகே உள்ள பொம்முலுகவுண்டனூரை சேர்ந்தவர் மணிவேல் (வயது 60). விவசாயி. இவருடைய மகன் பூபதி(20). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மணிவேல் ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த காளை திண்டுக்கல், வேடசந்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றுள்ளது.

இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் மணிவேல் தனது ஜல்லிக்கட்டு காளையை நான்கு வழிச்சாலை ஓரம் மேய்ச்சலுக்காக அழைத்து சென்றார். அங்கு காளை மேய்ந்து கொண்டிருந்தபோது, திடீரென்று அருகில் நின்றிருந்த மணிவேலை கொம்பால் குத்தியது. இதனால் கீழே விழுந்த அவரை விடாமல் காளை முட்டி பந்தாடியது. இதனால் அவர் தன்னை காப்பாற்றுமாறு அபயகுரல் எழுப்பினார். ஆனால் மேய்ச்சல் நிலத்தை சுற்றி கம்பி வேலி இருந்ததால் அக்கம்பக்கத்தினர் யாரும் உள்ளே செல்லமுடியவில்லை. இருப்பினும் அங்கிருந்த சிலர் கம்பி வேலி மீது ஏறி உள்ளே இறங்கி, காளையை விரட்டினர். ஆனால் அந்த காளை அவர்களையும் முட்ட வந்தது. இதனால் காளை அருகே செல்ல பயந்தனர்.

இதற்கிடையே மணிவேலை காளை முட்டியது குறித்த தகவல் அறிந்த பூபதி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அவர் சுமார் அரை மணி நேரம் போராடி காளையிடம் சிக்கிய தனது தந்தையை மீட்டார். இருப்பினும் காளை முட்டியதில் மணிவேல் பலத்த காயமடைந்தார். வயிற்றில் கொம்பு குத்தியதால் குடல் சரிந்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பூபதி தனது தந்தையை மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மணிவேல் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காளையிடம் சிக்கி உயிருக்கு போராடிய தந்தையை மீட்ட மகனின் பாசப் போராட்டம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்